ரஜினியுடன் நக்மா திடீர் சந்திப்பு :அரசியல் குறித்து பேசினாரா?
நடிகர் ரஜினியை, சென்னையில் உள்ள, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலர், நக்மா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்குப் பின், நக்மா அளித்த பேட்டி: ரஜினியும், நானும் நீண்ட கால நண்பர்கள். திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளோம். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் சந்திப்பு இருந்தது. சாதாரண சந்திப்பு தான். அரசியல் கலப்பு எதுவும் இல்லை; அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியலுக்கு, ரஜினி வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அரசியலுக்கு வந்தால், நிச்சயம் வெற்றி பெறுவார்.
காங்., ஆட்சி காலத்தில், காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது, அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு வளையல்கள் அனுப்பப்படும் என, பா.ஜ.,வை சேர்ந்த, தற்போதைய மந்திய மந்திரியான, ஸ்மிருதி இரானி தெரிவித்துஇருந்தார்.
தற்போது, காஷ்மீரில் வீரர்களின் மரணம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது குறித்து, பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார். எனவே தான், அவருக்கு, வளையல்கள் அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.இவ்வாறு நக்மா கூறினார்.
ரஜினியுடன், பா.ஜ.,-வினர் அரசியல் தொடர்பாக பேச்சு நடத்தி வரும் நிலையில், அவரை நக்மா சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.