Breaking News
டாக்டர்கள் அனுமதி தந்தால் தொண்டர்களை சந்திப்பார்; கருணாநிதி உடல்நிலையில் சீரான முன்னேற்றம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

மாணவர்களுக்கு ஏற்பட்ட துயரம்
கேள்வி:– நீட் தேர்வின் மாணவர்கள் மிகுந்த மன அழுத்ததிற்கு உள்ளாகும் வகையில் கெடுபிடிகள் நடந்து இருக்கிறதே?

பதில்:– நீட் தேர்வே கூடாது என்பது தான் தி.மு.க.வின் கொள்கை. அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆளும் கட்சியான அ.தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் கொண்டு வந்தபோது, அரசியல் நோக்கத்தோடு எண்ணாமல், நாங்கள் மனதார வரவேற்று வெளிப்படையாக ஆதரவு தந்து, அந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றித் தந்திருக்கிறோம்.

ஆனால், அந்த தீர்மானம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்துக்கு தீர்மானம் செல்லவில்லை என்ற செய்தியை அறிந்தபோது நாங்கள் உள்ளபடியே அதிர்ச்சிக்கு உள்ளானோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வை கண்டித்து கருத்தரங்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு, அந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது.

நீட் தேர்வு எழுத வந்த மாணவ–மாணவியர் எந்தளவுக்கு துன்பங்களுக்கு – துயரங்களுக்கு – அவமானப்படுத்தக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன், இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர்கள் அனுமதித்தால்…
கேள்வி:– கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் தேசிய அளவில் எந்தெந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்?

பதில்:– அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க.வின் செயல் தலைவர் என்ற முறையில் இது தொடர்பாக பல தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவரான கனிமொழி சில தலைவர்களை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார். அதேபோல, பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்றைக்கு பல தலைவர்களை சந்திக்கவிருக்கிறார். இன்னும் சில நாட்களுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, வைரவிழாவில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை ஊடகத்துறையினரை முறையாக அழைத்து அறிவிக்கப்படும்.

கேள்வி:– சட்டமன்ற வைரவிழா – பிறந்தநாள் விழாவில் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:– ஏற்கனவே இது குறித்து நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். கருணாநிதியின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், டாக்டர்கள் அனுமதி தந்தால் மட்டுமே தொண்டர்களை சந்திப்பது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

நக்மா சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார். எனவே அவரின் சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா என இருபெரும் விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழா ஜூன் 3–ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணிநேரம் நடந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு நக்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பங்கேற்பு
தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அவரை சந்தித்துள்ளேன். எனவே அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. ரஜினிகாந்தை நான் சந்தித்ததற்கும், தற்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததற்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லை.

கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் அவரது பிறந்தநாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அல்லது அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டிப்பாக வருவார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.