‘மனித உரிமையை மீறுவதாக தலாக் இருக்க கூடாது’
முஸ்லிம்களில் மும்முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையானது, மனித உரிமையை மீறுவதாக இருக்கக் கூடாது’ என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பில் கூறியுள்ளது.
மும்முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை :
இது தொடர்பான வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு அமர்வு, வரும் கோடை விடுமுறையில் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய கணவர், மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றதாக, உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசியலமைப்பு சட்டம் :
தன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, கீழ் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, அந்த பெண்ணின் கணவர், அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், அலகாபாத் ஐகோர்ட், சமீபத்தில் அளித்த தீர்ப்பின் விபரம், தற்போது வெளிவந்துள்ளது.
அந்த தீர்ப்பில் ஐகோர்ட் கூறியுள்ளதாவது: முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும், அரசியலமைப்பு சட்டம் பல்வேறு அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. தனிநபர் சட்டம் என்ற பெயரில், அரசியலமைப்பு சட்ட விதிகளை யாரும் மீற முடியாது. தலாக் என கூறி, மனைவியை விவாகரத்து செய்யும்போது, அது, அந்த பெண்ணுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறுவதாக இருக்கக் கூடாது. இவ்வாறு ஐகோர்ட் தீர்ப்பில் கூறியுள்ளது.