மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் மாட்ரிட் நகரில் நடந்துவருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, கனடா நாட்டைச் சேர்ந்த எகின்பவுசார்டை எதிர்த்து ஆடினார்.
இப்போட்டிக்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்த பவுசார்ட், ஷரபோவா ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, சில காலம் டென்னிஸ் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்ததை முன்வைத்து, அவர் ஷரபோவா மீது இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனால் டென்னிஸ்களத்தில் பவுசார்டுக்கும், ஷரபோவாவுக்கும் இடையிலான மோதலில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் ஆடுகளத்தில் இந்த இரு வீராங்கனைகள் இடையிலான மோதல் ஆவேசமாக இருந்தது. முதல் செட்டை 5-7 என இழந்த ஷரபோவா, அடுத்த செட்டில் கடுமையாக போராடினார். இதன்மூலம் அந்த செட்டை 6-2 என வசப்படுத்தினார். அதனால் 3-வது செட் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இதில் மிகச் சிறப்பாக ஆடிய பவுசார்ட் அந்த செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 7-5, 2-6, 6-4 என்ற செட்கணக்கில் பவுசார்ட் வெற்றிபெற்று, ஷரபோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இப்போட்டியில் வென்ற பிறகு நிருபர்களிடம் பவுசார்ட் கூறியதாவது:
ஷரபோவா ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்ற எனது கருத்தை ஏராளமான டென்னிஸ் ரசிகர்களும், சில வீராங்கனைகளும் ஆதரித்திருந்தனர். இப்போட்டியில் நான் வெல்ல அவர்கள் வாழ்த்துதெரிவித்தனர். மனதளவில் என்பக்கம் இருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர். இது எனக்கு நம்பிக்கை அளித்தது.
ஷரபோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் எப்படியும் வென்றாக வேண்டும் என்று உத்வேகத்துடன் போராடினேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. நான் அவரை வீழ்த்திவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
3-வது சுற்றுப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை எதிர்த்து பவுசார்ட் ஆடவுள்ளார். முன்னதாகநேற்று முன்தினம் நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 1-6, 7-5 என்ற செட்கணக்கில் காத்ரினா சினியாகோவாவை வென்றார்.
இந்திய வீரர்கள் வெற்றி
உஸ்பெகிஸ்தானில் உள்ள கர்ஷி நகரில் கர்ஷி சாலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் முதல் சுற்றில் இந்திய வீரரான யூகி பாம்பரி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சக நாட்டைச் சேர்ந்த பிராணேஷ் குணேஸ்வரனைத் தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீரரான ராம் பாலாஜி, 6-3, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் பரூக் டஸ்டோவை வென்றார். அதே நேரத்தில் மற்றொரு இந்திய வீரரான ராம்குமார் ராமநாதன் 4-6, 4-6 என்ற செட்கணக்கில் இத்தாலி வீரரான கெம் இக்கெலிடம் தோற்றார்.