மே 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: வெளியீட்டு சிக்கலில் புதிய படங்கள்
மே 30-ம் தேதி முதல் தமிழ் திரையுலகம் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதால், மே 12-க்குப் பிறகு வெளியாகவுள்ள படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய விஷால், “மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது. தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில முக்கிய அமைப்புகள் இணைந்து இம்முடிவு எடுத்துள்ளன” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவால், மே 12-ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் படங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மே 30-ம் தேதி முதல் திரையரங்குகள், படப்பிடிப்பு என எதுவுமே செயல்படாது என்று அறிவித்துள்ளதால், மே 19-ம் தேதிக்கு பிறகு படங்களை வெளியிட்டால் சரியாக இருக்குமா என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘பாகுபலி 2’வுக்கு வரவேற்பு மற்றும் வேலைநிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மே 19ம் தேதி வெளியாகவிருந்த ‘வனமகன்’, மே 12ம் தேதி வெளியாகவிருந்த ‘உள்குத்து’, ‘மாயவன்’, ‘தொண்டன்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட பல படங்கள் வெளியீட்டை மாற்றியமைத்துள்ளார்கள்.
மேலும், ஜுன் மாதம் வெளியீடு என்று மாற்றினால் அனைத்து படங்களும் ஒரே தேதியில் வெளியானால் திரையரங்குகள் கிடைக்காது என்று தயாரிப்பாளர்கள் தரப்பு புலம்பி வருகிறது. இந்த வெளியீட்டு சிக்கலுக்கு விஷால் ஒரு முடிவு காண வேண்டும் என்பது தான் அனைவரது கோரிக்கையாகவும் இருக்கிறது.