சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப் போட்டியில் ஜூவென்டஸ் அணி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியை வீழ்த்திய ஜூவென்டஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் கட்ட அரை இறுதியில் ஜூவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று இத்தாலியின் டுரின் நகரில் 2-வது கட்ட அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. 33-வது நிமிடத்தில் ஜூவென்டஸ் அணி முதல் கோலை அடித்தது.
அந்த அணி வீரர் மரியோ மன்ட்ஸ்யூக், எதிரணி வீரர்களின் தடுப்புகளை மீறி கோல் கம்பத்தின் மிக அருகே வைத்து அடித்த இந்த கோலால் ஜூவென்டஸ் 1-0 என முன்னிலை பெற்றது. 44-வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான டேனி ஆல்வஸ் அடித்த கோலால் முதல் பாதி ஆட்டத்தில் ஜூவென்டஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
69-வது நிமிடத்தில் மொனாக்கோ பதிலடி கொடுத் தது. 18 வயதான கைலன் பாப்பே இந்த கோலை அடித்தார். ஆனால் இதன் பின்னர் அந்த அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. அதேவேளை யில் ஜூவென்டஸ் அணி தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்தியது. முடிவில் ஜூவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரு கட்ட அரை இறுதி ஆட்டங்களில் அடிக்கப்பட்ட கோல்களின் சராசரி விகிதப்படி ஜூவென்டஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அந்த அணி கடந்த 3 ஆண்டு களில் 2-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்து அசத்தி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பார்சிலோனோவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வி யடைந்திருந்தது.