‘பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இந்திய பெண் உஜ்மா ஏற்கெனவே திருமணமானவர்?’
உஜ்மா ஏற்கனவே திருமணமானவரா? உடல் நலமில்லாத சித்தி எங்கே? உஜ்மாவின் பாட்டி யார்? ஏன் தவறான முகவரியை விசா விண்ணப்பத்தில் கொடுக்கவேண்டும்? இது போன்ற பல புதிய வினாக்கள் சேர்ந்துவிட்டன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகத்தில் சரணடைந்திருக்கும் இந்தியப் பெண் உஜ்மா ‘மருத்துவர்’ என்றால், தில்லியில் அவர் வசித்த அவரை சிலருக்காவது அடையாளம் தெரிய வேண்டுமல்லவா?
உஜ்மாவை அறிந்தவர்கள் சொல்லும் தகவலோ தலையை சுற்றவைக்கிறது. ஏற்கனவே திருமணமான உஜ்மாவுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறதாம்!
இந்த விவகாரத்தில் ஏற்கனெவே பல முரண்கள் இருக்கும் நிலையில், சிக்கல் இடியாப்ப சிக்கலாகிவிட்டது.
மே மாதம் முதல் தேதியன்று பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாஹா எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் சென்ற உஜ்மா, பாகிஸ்தான் குடிமகனான தாஹிர் அலியை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், தனக்கு துப்பாக்கி முனையில் திருமணம் நடந்ததாக உஜ்மா குற்றம் சாட்டுகிறார். மணமகனோ அதனை மறுக்கிறார்.
இந்தியா திரும்பவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய தூதரகத்தில் உஜ்மா சரண் புகுந்திருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துடன் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.
தாஹீர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதும், நான்கு குழந்தைகளும் இருப்பதும் திருமணத்திற்கு பிறகு தான், தனககு தெரியவந்ததாக குற்றம்சாட்டும் உஜ்மா, இது தொடர்பாக புகாரும் கொடுத்திருக்கிறார்.
‘திருமணமான உஜ்மா’
பாகிஸ்தான் விசா வாங்குவதற்காக உஜ்மா கொடுத்திருந்த விலாசத்தை கண்டறியும் முயற்சி விசித்திரமானது. நெரிசல் மிகுந்த பகுதியையே முகவரி காட்டியது, வீட்டை அல்ல.
ஆனால், விசா விண்ணப்பத்தில் கொடுத்திருந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணைக் கொண்டு ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கைப்பேசி எண் செயல்படாவிட்டாலும், அதில் கொடுக்கப்பட்டிருந்த முகவரியை வைத்து உஜ்மா, டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் சில நாட்களுக்கு முன் வசித்து வந்ததை கண்டறியமுடிந்தது.
அந்தப் பகுதியில் நவீன ஆடைகள் விற்பனைக் கடையை நடத்திவந்த உஜ்மா அனைவருக்கும் பரிச்சயமானவராக இருந்திருக்கிறார்.
பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஒரு பெண் தெரிவித்த தகவல்களின்படி, உஜ்மாவுக்கு திருமணமாகி நான்கு வயது பெண் குழந்தையும் இருக்கிறது. தனது குழந்தையின் பெயரில் கடையை நடத்தி வந்த நஜ்மா, திருமண உறவு முறிந்த பிறகு மலேஷியாவுக்கு சென்றுவிட்டார்.
தவறான விசா முகவரி
உஜ்மாவுடன் தான் தொடர்பில் இருந்ததாக கூறும் அந்தப் பெயர் வெளியிட விரும்பாத பெண்ணின் கூற்றுப்படி, ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு முன்பிருந்து உஜ்மாவின் கைப்பேசி செயல்படவில்லை.
மறுமணம் செய்துக் கொள்ளுமாறு பலமுறை உஜ்மாவுக்கு அறிவுரை கூறியபோது, நல்ல மனிதர் கிடைத்தால் திருமணத்திற்கு தயார் என்று உஜ்மா கூறியிருக்கிறார்.
மலேஷியாவில் ஒரு பாகிஸ்தானியரை சந்தித்ததாக சொன்னாலும், திருமணம் பற்றி எதுவும் கூறவில்லை என்று அந்தப் பெண்மணி தெரிவித்தார். தனது மகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவரையே மணம் முடிக்கும் முடிவில் உஜ்மா இருந்தாராம்.
உஜ்மாவின் பெற்றோரை பார்த்ததே இல்லை என்று மற்றொரு அண்டை வீட்டுப் பெண் கூறுகிறார். ஆனால், அருகில் உள்ள செளஹான் பாங்கர் என்ற பகுதியில் வசிக்கும் அவரது பாட்டி, தினந்தோறும் உஜ்மாவின் கடைக்கு வந்து செல்வார் என்று சொல்கிறார்.
விசா விண்ணப்பத்தில் உஜ்மா குறிப்பிட்டிருந்தது செளஹான் பாங்கர் பகுதியின் முகவரி தான்.
ஆனால், உஜ்மா மருத்துவரா என்பது தங்களுக்கு தெரியாது என்று அந்தப் பெண்கள் இருவரும் கூறுகின்றனர். உடல்நலமில்லாத தனது சித்தியை பார்ப்பதற்காக பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று தனது விசா விண்ணப்பத்தில் உஜ்மா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பயணம், உறவினர் சந்திப்பு, சந்திக்கச் சென்ற உறவினர்கள் யார்? திருமணம் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்டதா? என்ற கேள்விப்பட்டியலில், உஜ்மா ஏற்கனவே திருமணமானவரா? உடல் நலமில்லாத சித்தி எங்கே? உஜ்மாவின் பாட்டி யார்? ஏன் தவறான முகவரியை விசா விண்ணப்பத்தில் கொடுக்கவேண்டும்? இது போன்ற பல புதிய வினாக்கள் சேர்ந்துவிட்டன. வினாக்களுக்கான விடையளிக்க வேண்டியவரோ தஞ்சம் கோரி தூதரகத்தில் உள்ளார்.