மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி- 7 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் குவித்து மும்பை அணியை மிரளச் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விருத்திமான் சாஹா 55 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மெக்லீனகன் வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்டரிகளும் ஹர்பஜன் சிங், மலிங்கா, ஹர்திக் பாண்டியா ஆகியோரது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸரும் விளாசி மிரட்டினார் சாஹா. 31 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் அடுத்த 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.
மற்றொரு தொடக்க வீரரான மார்ட்டின் கப்திலுடன் இணைந்து சாஹா பவர் பிளேவில் பிரமாதமாக விளையாடினார். இந்த ஜோடி 5 ஓவர்களில் 60 ரன்கள் விளாசியது. கப்தில் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் கரண் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல், மும்பை பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். அவரது அதிரடியால் பஞ்சாப் அணி 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கரண் சர்மா வீசிய 9-வது ஓவரில் 2 சிக்ஸர்களும், ஹர்பஜன் சிங் வீசிய அடுத்த ஓவரில் 3 சிக்ஸர்களையும் மேக்ஸ் வெல் பறக்கவிட்டார்.
அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில், 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் போல்டனார். 2-வது விக்கெட்டுக்கு சாஹா – மேக்ஸ்வெல் ஜோடி 63 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் 16 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களும், அக்�ஷர் படேல் 13 பந்தில், ஒரு சிக்ஸருடன் 19 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 231 ரன்கள் இலக்குடன் மும்பை அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களான சிம்மன்ஸ், பார்த்தீவ் படேல் அதிரடியாக விளையாடினார். ஹென்றி வீசிய 2-வது ஓவரில் பார்த்தீவ் படேல் 3 பவுண்டரிகள் விரட்டினார்.
மோஹித் சர்மா வீசிய 6-வது ஓவரில் சிம்மன்ஸ் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பவர் பிளேவில் 68 ரன்கள் சேர்க்கப்பட்டன. அக்�ஷர் படேல் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தில் சிம்மன்ஸ் கொடுத்த கேட்ச்சை மோஹித் சர்மா தவறவிட்டார். அப்போது 44 ரன்களில் இருந்த சிம்மன்ஸ் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதே ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். மோஹித் சர்மா வீசிய 9-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்த பார்தீவ் படேல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.
9 ஓவர்களில் மும்பை அணி 104 ரன்கள் குவித்தது. மேக்ஸ் வெல் வீசிய 10-வது ஓவரின் 3-வது பந்தை சிம்மன்ஸ் சிக்ஸருக்கு தூக்க முயன்றார். இதனை எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற கப்தில் பிரம்மிக்கத்தக்க வகையில் துள்ளியவாறு ஒற்றை கையால் கேட்ச் செய்தார்.
சிம்மன்ஸ் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிங்கிய ரோஹித் சர்மா 5 ரன்களிலும், நித்திஷ் ராணா 12 ரன்களிலும் வெளியேறினர்.
மும்பை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 83 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹென்றி வீசிய 16-வது ஓவரில் பாண்டியாவும், பொலார்டும் தலா இரு சிக்ஸர்கள் விளாச இந்த ஓவரில் 27 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய பாண்டியா 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கரண் சர்மா, மோஹித் சர்மா வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். கரண் சர்மா 6 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவையாக இருந்தது.
சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் 7 ரன்களே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மோஹித் சர்மா வீசினார். முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தை பொலார்டு சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த 3 பந்துகளையும் அவர் வீணடிக்க பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
பொலார்டு 50, ஹர்பஜன் சிங் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.