ரஷ்யா முறைகேட்டை விசாரிக்க தனி குழு தேவையில்லை: அமெரிக்கா
‘அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா முறைகேடு செய்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க, தனிக் குழு அமைக்கத் தேவையில்லை’ என, அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், ஜனவரியில் பதவியேற்றார். முன்னதாக அதிபர் தேர்தலின்போது, டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்ய அரசு, பல்வேறு முறைகேடுகளை செய்ததாக புகார்கள் எழுந்தன.இது குறித்து விசாரித்து வந்த, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ.,யின் தலைவர், ஜேம்ஸ் காமே, சமீபத்தில், பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரித்ததால் தான், காமேயை பதவியில் இருந்து டொனால்டு டிரம்ப் நீக்கியதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையில், எப்.பி.ஐ., பொறுப்பு தலைவராக உள்ள, துணைத் தலைவர் ஆன்ட்ரூ மகாபேவை, அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அதிபர் மாளிகை முதன்மை துணைச் செயலர் சாரா ஹகாபே சான்ட்ரல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து, பார்லிமென்ட் குழு, நீதித் துறை விசாரித்து வருகின்றன. அதனால், இது தொடர்பாக
விசாரிக்க, தனியாக எந்தக் குழுவையும் அமைக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.