7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது புனே
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி டேர்டெல்வில்ஸ் அணிக்கு எதி ரான ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 7 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது.
பெரோஷா கோட்லா மைதா னத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 2 ரன்னில் பென் ஸ்டோக்ஸால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயதேவ் உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார். 9 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கருண் நாயருடன் இணைந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினார்.
முதல் 3 ஓவர்களில் பவுண் டரிகளே அடிக்கப்படாத நிலையில் அடுத்த இரு ஓவர்களில் இந்த ஜோடி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தது. அதிலும் ஸ்டோக்ஸ் வீசிய 5-வது ஓவரில் கருண் நாயர் 3 பவுண்டரிகள் விரட்டினார். பவர் பிளேவில் 54 ரன்கள் சேர்க்கப்பட்டன.
ஆடம் ஸம்பா வீசிய 9-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசிய நிலையில் அடுத்த பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்களில் டெல்லி அணி 85 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய மார்லன் சாமுவேல்ஸ், ஷர்துல் தாக்குர் வீசிய 12-வது ஓவரின் கடைசி இரு பந்துகளை சிக்ஸருக்கு விளாசினார். அதிரடியாக விளை யாடிய சாமுவேல்ஸ் 21 பந்து களில் 27 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்டியன் பந்தில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன் 3, கம்மின்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கருண் நாயர் 37 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். உனத்கட் வீசிய 18-வது ஓவரில் கருண் நாயர் 2 பவுண்டரியும், அமித் மிஸ்ரா ஒரு சிக்ஸரும் விளாச இந்த ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டன.
19-வது ஓவரை வீசிய ஸ்டோக்ஸ் நெருக்கடி கொடுத் தார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் கருண் நாயரையும் ஆட்டமிழக்க செய்தார். கருண் நாயர் 45 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரை வீசிய உனத்கட்டும் நேர்த்தியாக வீச, இந்த ஓவரில் டெல்லி அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் முகமது ஷமி (2) விக்கெட்டையும் அந்த அணி இழந்தது.
புனே அணி தரப்பில் உனத்கட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 169 ரன்கள் இலக் குடன் புனே அணி பேட் செய் தது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஜாகீர் கான் வீசிய முதல் பந்திலேயே ரஹானே ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்டானார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினார். அவர், ஷபாஸ் நதீம் வீசிய 4-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. அடுத்த ஓவரை வீசிய ஜாகீர்கான், ராகுல் திரிபாதியை 7 ரன்களில் வெளியேற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய மனோஜ் திவாரி, முகமது ஷமி வீசிய 6-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்ட பவர் பிளேவில் புனே அணி 53 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 32 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஷபாஸ் நதீம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 74 ஆக இருந்தது.
4-வது விக்கெட்டுக்கு கள மிறங்கிய பென் ஸ்டோக்ஸ், மனோஜ் திவாரியுடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். ஸ்டோக்ஸ் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந் தார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப் பட்டது.
18-வது ஓவரின் 3-வது பந்தில் தோனி ரன் அவுட் ஆனார். அவர் 5 ரன்களே எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷமி வீசிய 19-வது ஓவரில் கிறிஸ்டியன் (3) ஆட்டமிழக்க இந்த ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது.
கடைசி 6 பந்துகளில் 25 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய இந்த ஓவரில் முதல் இரு பந்துகளையும் திவாரி சிக்ஸராக மாற்றினார். அடுத்த பந்து வைடானது. 3 மற்றும் 4-வது பந்தை வீணடித்த திவாரி 5-வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திவாரி ஆட்டமிழந்தார். முடிவில் 20 ஓவர்களில் புனே அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து தோல்வி யடைந்தது. திவாரி 60 ரன்கள் எடுத்தார்.
இந்த தோல்வியால் புனே அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள் ளது.