காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
தொடரும் அத்துமீறல்
காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது அத்துமீறிய தாக்குதல்கள் நடத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் அதிகாலையில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தொடர் தாக்குதலில் ஒரு சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 3 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அத்துமீறிய தாக்குதலை தொடுத்தது. அதிகாலை 6.20 மணியளவில் ரஜோரி மாவட்டத்தின் மஞ்சாகோட் பகுதியில் அந்தநாட்டு வீரர்கள் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் 7-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
பாதுகாப்பு முகாம்கள்
பீரங்கி குண்டுகள் பாய்ந்ததில் ஏராளமான கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. அதனை தொடர்ந்து இந்திய தரப்பில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதிகாலை 6.45 மணிக்கு ரஜோரி மாவட்டத்தின் சித்திபக்ரி பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அவர்களை இந்திய வீரர்கள் திருப்பி தாக்கினர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 3 கிராமங்களை சேர்ந்த 259 குடும்பங்கள் இந்த முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளன.
அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக நவுஷேரா செக்டாரில் உள்ள 51 பள்ளிக்கூடங்கள், மஞ்சாகோட் மற்றும் டூங்கி மண்டலங்களில் உள்ள 36 பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 பயங்கரவாதிகள்
இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் உள்ள பகத்புரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
குறிப்பிட்ட ஒரு இடத்தை நெருங்கிய போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து துப்பாக்கிகளால் சுட்டனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் பாதுகாப்புபடை வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன.