700 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்தது: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரடி டிரம்ப் கடும் கண்டனம்
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரடியில் ஈடுபட்டது.
இந்த சோதனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அடாவடி
ஐ.நா. சபையின் தடையை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ‘பேலிஸ்டிக்’ என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், வடகொரியா இப்படி அடாவடியில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடந்த மாதத்தில் வடகொரியா நடத்திய இரு ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்தன. ராக்கெட்டுகள் விண்ணில் பறந்த சில வினாடிகளில் வெடித்து சிதறியது அந்த நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
மீண்டும் ஏவுகணை சோதனை
ஆனாலும் சற்றும் மனம் தளராத நிலையில், அந்த நாடு நேற்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை மிக்க ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இந்த சோதனை, அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குஸாங் என்ற இடத்துக்கு அருகே இருந்து ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு விண்ணில் செங்குத்தாக சென்று, 700 கி.மீ. தொலைவுக்கு சென்று, ஜப்பான் கடலில் விழுந்தது.
ஜப்பான் தகவல்
வடகொரியா நடத்தி இருப்பது நீண்ட தொலைவுக்கு செல்லும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணைதான் என நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதுபற்றி ஜப்பான் ராணுவ மந்திரி டோமோமி இனடா கருத்து தெரிவிக்கையில், ‘‘வடகொரியாவின் ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக சென்று, 700 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, ஜப்பான் கடலில் விழுந்தது. வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் ஏவி சோதித்த ஏவுகணையை விட இது நீண்ட தொலைவுக்கு பறந்துள்ளது’’ என கூறினார்.
அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய ராணுவ தலைமை விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வடகொரியா ஏவி சோதித்துள்ள ஏவுகணை எந்த ரகத்தை சேர்ந்தது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜப்பான் கணிப்பு உண்மையென்றால், ஏவுகணை தொழில் நுட்பத்தில் வடகொரியா மேலும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக தென்படுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிரம்ப் கண்டனம்
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
அதே வேளையில், வடகொரியா விவகாரத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சீனா கூறி உள்ளது.
தென் கொரியாவில் புதிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றபின்னர், வடகொரியா நடத்தியுள்ள முதல் ஏவுகணை சோதனை இதுதான்.
இந்த சோதனை குறித்து தகவல் அறிந்த உடனேயே மூன் ஜே இன் தனது பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, ‘‘வடகொரியாவின் நடவடிக்கை ஆத்திரமூட்டக்கூடியது’’ என கூறி அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த சோதனையால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கவலை கொண்டுள்ளதாக அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.