அகில இந்திய ஹாக்கி போட்டி: செகந்திராபாத் அணி சாம்பியன்
கோவில்பட்டியில் கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக் கட்டளை சார்பில், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் டெல்லி ஓஎன்ஜிசி- செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணிகள் மோதின.
ஆட்டத்தின் முடிவில், இரு அணிகளும் 2- 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி 6- 5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
3-வது இடத்துக்கான போட்டியில் கபுர்தாலா ஆர்சிஎப் 4- 3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆர்மி லெவன் அணியை வென்றது.
முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.75 ஆயிரம் பரிசும், 3-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரமும், 4-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.