போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் : 90 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை
* அனுபவமில்லாத டிரைவர்கள் இயக்கியதால் மக்கள் பீதி
* ரயில்களில் கட்டுக்கடங்காமல் அலைமோதியது கூட்டம்
* ஆட்டோ, டாக்ஸி, தனியார் பஸ்களில் கட்டணக் கொள்ளை
* கடும் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்து பயணிகள் அவதி
சென்னை : போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பஸ் ஸ்டிரைக்கால், தமிழகமே ஸ்தம்பித்தது. 90 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் வாகனங்கள் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு காலதாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த மார்ச் 7 மற்றும் மே 4 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நிலுவையில் உள்ள ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், 13வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்பட 10 தொழிற்சங்கங்கள் 15ம் தேதி முதல் (நேற்று) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. ஆனால் நேற்று முன்தினம் சென்னை பல்லவன்
இல்லத்தில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே, சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்பட பல இடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதுபோன்று பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் கோயம்பேட்டுக்கு வந்திருந்த பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் நெடுநேரம் காத்திருந்தனர். நேற்று முன்தினம் மாலையிலேயே பஸ் ஸ்டிரைக் தொடங்கிய நிலையில் நேற்றும் 2ம் நாளாக நீடித்தது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமாக 32 பணிமனைகள் உள்ளன. இவற்றிலிருந்து, அதிகாலை 4 மணிக்கு பஸ்கள் வெளியே செல்லும். ஆனால் நேற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் யாருமே பணிக்கு வரவில்லை. தொடர்ந்து 6 மணி வரை பஸ்கள் இயக்கப்படாததால், நேற்று அதிகாலை கூலி வேலைக்கு செல்பவர்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் குறிப்பாக வடபழனி பணிமனையில் இருந்து வழக்கமாக 220 பஸ்கள் காலை 7 மணிக்குள் வெளியே செல்லும். ஆனால் நேற்று 20 பஸ்கள் தான் வெளியே சென்றுள்ளன. இதே போன்று தாம்பரத்தில் 180 பஸ்களுக்கு 30ம், குரோம்பேட்டையில் 154 பஸ்களுக்கு 34 பஸ்களும், அண்ணாநகர் மேற்கு டெப்போவில் 202 பஸ்களுக்கு 40ம் வெளியே சென்றுள்ளன. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்களும் வரவில்லை. தொடர்ந்து லாரி டிரைவர்கள், பள்ளிகளில் பஸ்களை ஓட்டுபவர்கள், தண்ணீர் லாரி டிரைவர்கள், ஆம்னி பஸ் டிரைவர்கள் என கண்ணுக்கு தென்பட்ட கத்துக்குடிகளை எல்லாம் அழைத்து வந்து பஸ்களை இயக்கினர். சற்றும் அனுபவமில்லாத டிரைவர்கள் பல இடங்களில் பஸ்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றதால் பயணிகள் பீதியில் அலறினர்.
ஒட்டுமொத்தமாக கணக்கிடுகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3,637 பஸ்களில் 200 பஸ்கள் கூட நேற்று இயங்கவில்லை. கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் ஒன்று கூட இயங்கவில்லை. குறிப்பாக பெங்களூர், திருப்பதி உள்பட வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் இயங்கவில்லை. இதனால் பயணிகள் நெடு நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலில் காத்திருந்து அவதிப்பட்டனர். மாறாக கோயம்பேட்டில் தனியார் பேருந்துகளும், சுற்றுலா பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால், தனியார் பேருந்துகள் கூடுதலாக மூன்று மடங்கு கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி 55 முதல் 60 பேர் வரை செல்லக்கூடிய ஒரு பஸ்சில், சுமார் 120 பேர் வரை ஏற்றுவதாகவும், பயணிகள் உயிருக்கு எவ்வித உத்தரவாதமின்றியும் தனியார் பஸ்கள் இயங்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதேநிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்தது. திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் இயங்கவில்லை. கிராமங்களுக்கு முழுமையாக பஸ்கள் நிறுத்தப்பட்டன. நகரங்களில் தனியார் பஸ்கள் இயங்கின. சில இடங்களில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், டாக்சிகள், ஷேர் ஆட்டோக்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் வாங்குவதற்காக சென்ற மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர். அதைத் தவிர வேலைக்குச் செல்பவர்கள், நேர்முகத் தேர்வுக்கு சென்றவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் இன்றும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்மிட் இல்லாத தனியார் வாகனங்கள்
பெர்மிட் இல்லாத தனியார் பஸ்கள் சென்னையில் நேற்று காலை முதல் அதிக அளவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உதாரணத்துக்கு விழுப்புரம் – திருவண்ணாமலை, காஞ்சிபுரம் – விழுப்புரம், திருச்சி – விழுப்புரம், உள்பட வெளி மாவட்ட மார்க்கங்களுக்கு இயங்க கூடிய தனியார் பேருந்துகள், நேற்று இரவே அரசு அனுமதியுடன் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் இயக்க கூடிய பஸ்கள் சென்னைக்கு வரவேண்டும் என்றால், ெபர்மிட் பெற்று இருக்க வேண்டும். ஆனால் எந்த ெபர்மிட்டும் இல்லாமல் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்கள் சென்னைக்குள் நுழைந்துள்ளன. எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பயணிகள் உயிருக்கு அரசு உத்தரவாதம் அளிக்குமா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.
ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்
கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல எந்த அரசு பஸ்களும் இயங்கவில்லை. இதனால் மக்கள் செய்வதறியாது அடுத்த கட்ட முயற்சியாக ரயில்களை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் இவை போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி கடற்கரை, சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்பட அனைத்து மின்சார ரயில்நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
டிரைவர் சம்பளம் ரூ.300
பஸ் ஸ்டிரைக் நடக்கும் பட்சத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் டிரைவர்களை இன்டர்வியூ செய்து, அவர்களது லைசென்சையும் பரிசோதனை செய்து தற்காலிகமாக பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களும் நேற்று முன்தினம் மாலை முதலே தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.300 பேசப்பட்டுள்ளது. வழித்தடம் தெரியாத டிரைவர்கள்
டிக்கெட் இல்லாத கண்டக்டர்கள்
நேற்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் ஒரு சில முக்கியமான இடங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நியமித்த டிரைவர், கண்டக்டர்களை கொண்டு பஸ்களை இயக்கியது. அந்த டிரைவர்களுக்கு பஸ்சை எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்த பாதையில் பஸ்களை இயக்கிகொண்டு சென்றனர். மேலும் கண்டக்டர் ஒருவரிடமும் டிக்கெட் புக் இல்லை.