ரிஷப் பந்த் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார்: ராகுல் திராவிட் கணிப்பு
வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக ரிஷப் பந்த் திகழ்வார் என ராகுல் திராவிட் கணித்துள்ளார்.
ஐபிஎல் 10-வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய 19 வயதான இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் டெல்லி டேர்டெல் வில்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி ராகுல் திராவிட் கூறியதாவது:
ரிஷப் பந்த், இந்த ஆண்டு சிறப் பாக விளையாடினார். இந்த தொடரில் அவர் கடினமான சூழ்நிலையிலேயே களமிறங் கினார். தந்தையை இழந்த நிலையில், மனதை திடப்படுத்திக் கொண்டு அவர் சிறப்பாக பேட் செய்தார்.
சோகத்தை வென்ற அவர் இந்த சீசனில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். வருங்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக ரிஷப் பந்த் நிச்சயம் திகழ்வார். இந்த சீசனில் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம்தான்.
தொடரை சிறப்பாக தொடங்கிய நாங்கள் ஒரு சில ஆட்டங்களில் நெருங்கிச் சென்றும் தோல்வியடைந்தோம். மேலும் தொடரின் நடுப்பகுதியில் வெற்றிகளை சேர்க்க தவறினோம். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த சீசனில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்ற நாங்கள், இந்த சீசனில் 6-ல் வெற்றி பெற்றோம். கடைசி வரை நெருங்கிச் சென்று தோல்வியடைந்த ஆட்டங்களால் தான் இம்முறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டோம் என கருதுகிறேன்.
துரதிருஷ்டவசமாக இந்த சீசனை தொடங்கும் முன்னதாகவே அனுபவம் வாய்ந்த வீரர்களான குயிண்டன் டி காக், டுமினி ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர். கடைசி நேரத்தில் இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏராளமான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. அப்போதே அணியின் சமநிலையை இழந்துவிட்டோம். பேட்டிங்கில் இளம் இந்திய வீரர்களை கொண்டிருந்ததால், அனுபவம் வாய்ந்த பந்து வீச்சுடன் களமிறங்க முடிவு செய்தோம்.
இளம் வீரர்களிடம் திறன் அதிக அளவில் உள்ளது. ஆனால் வெற்றி பெற வேண்டுமானால் அணி சமநிலையுடன் அமைய வேண்டும். மேலும் அதிர்ஷ்டமும் எங்களுக்கு கைகொடுக்கவில்லை. தவறான நேரத்தில் வீரர்கள் காயம் அடைந்தனர். ஒரு சில வீரர்கள் நாங்கள் விரும்பியவாறு திறனை வெளிப்படுத்த வில்லை.
இவ்வாறு ராகுல் திராவிட் கூறினார்.