அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம்!
மேற்கு வங்கத்தில், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை வங்க மொழிப் பாடம் கட்டாயமாகிறது’ என, மாநில அரசு அறிவித்துள்ளது.
அதிரடி:
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மாநிலத்தில் வங்க மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும், வருங்கால சந்ததியினர் வங்க மொழியில் சரளமாக பேசவும், எழுதவும் அறியும் வகையிலும், அனைத்து பள்ளிகளிலும், வங்க மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி, மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உத்தரவு:
இது குறித்து, மாநில கல்வி அமைச்சர், பார்தா சாட்டர்ஜி கூறியதாவது: மாநிலத்தின் பெரும்பாலான பள்ளிகளில், வங்க மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மேற்கு வங்கத்தில், பிற மாநில மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிகள், தாய் மொழியை கற்பிக்க தயக்கம் காட்டுகின்றன. வருங்கால சந்ததியினர், வங்க மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும், படிக்கவும் வசதியாக, அனைத்து பள்ளிகளிலும், வங்க மொழியை பயிற்றுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டாயம்:
மாநில அரசு பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மட்டுமின்றி, ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளும், 10ம் வகுப்பு வரை வங்க மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும். ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மூன்று மொழிப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், மொழிப்பாடங்களை தேர்வு செய்யலாம். இந்நிலையில், மூன்றில் ஒரு மொழிப் பாடமாக, வங்க மொழியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.