தமிழகத்தில் ‘எந்திரன்’ சாதனையை முறியடித்தது ‘பாகுபலி 2’
தமிழக விநியோகத்தில் ‘எந்திரன்’ படத்தின் சாதனையை முறியடித்து ‘பாகுபலி 2’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் ‘பாகுபலி 2’. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘பாகுபலி 2’ படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ‘பாகுபலி 2’. உலகளவில் ரூ.1300 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்நிலையில் தமிழக விநியோகத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் தான் ஒட்டுமொத்த வசூலில் ரூ.105 கோடியை ஈட்டியது. இதனை ‘பாகுபலி 2’ 18 நாட்களில் முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
‘எந்திரன்’ படத்துக்கு வரிச்சலுகை கிடைத்தது. இதனால் பங்குத் தொகை போக தயாரிப்பாளருக்கு 60 கோடிக்கு மேல் கிடைத்தது. இதனையும் ‘பாகுபலி 2’ விரைவில் முறியடிக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்தது. ஏனென்றால், ‘பாகுபலி 2’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் என்பதால் வரி உண்டு. ஆகையால் பங்குத் தொகை போக சுமார் ரூ.55 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் ‘பாகுபலி 2’ பெரும் வெற்றியடைந்துள்ளதால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.