2-வது நாளாக ரஜினியுடன் சந்திப்பு: கடைசி நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் – ரசிகர்கள் நம்பிக்கை
அரசியலுக்கு வருவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ரஜினிகாந்த் நேற்று சென்னையில் 2-வது நாளாக ரசிகர்களை சந்தித்தார். முதல் நாள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ரசிகர்களிடம் மனம்திறந்து பேசிய ரஜினிகாந்த், நேற்று பெரிதாக எதையும் பேசவில்லை. நேற்று ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து, “எல்லோருக்கும் வணக்கம். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இவ்வளவு நேரம் எப்படி அமைதியாக இருந்தீர்களோ அதைப்போலவே புகைப்படம் எடுக்கும் நிகழ்வு முடியும்வரை அமைதி காக்கவும்!’’ என்று வேண்டுகோள் விடுத்தார். முதல் நாளைப்போலவே காலை 9 மணிக்கு தொடங்கிய புகைப்படம் எடுக்கும் நிகழ்வு 2 மணி நேரத்துக்குள் நிறைவு பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ரசிகர்கள் சந்திப்புக்காக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை இதே ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். ரசிகர்மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஒரு பாமர ரசிகன், “இத்தனை வருஷமா தலைவரின் ரசிகரா இருக்கீங்க. ஆனா அவரோட ஒரு புகைப்படம்கூட எடுக்க முடியவில்லை என்று என் மனைவி கேட்டார். எனக்கு அது மன வருத்தமாக இருந்தது. இப்போது என் மனைவி உயிருடனே இல்லை. தலைவரும் இதோ சந்திப்போம், அதோ சந்திப்போம் என்று சொல்கிறாரே தவிர அதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை!’’ என்று கண்ணீர் மல்க தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வ மான கேள்விகள்தான் இத்தனை ஆண்டு களுக்கு பிறகு நடக்கும் இந்த ரசிகர்கள் சந்திப்புக்கு தூண்டுகோலாக அமைந்தது என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.
அரசியல் வியூகம்
ரசிகர்களுடனான 2 நாட்கள் சந்திப்பு முடிந்து மாலை வீட்டுக்குச் சென்ற ரஜினிகாந்த், சமூக வலைதளங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி வாதங்கள் ஆகியவற்றில் இதுபற்றி வரும் விமர்சனங்கள் பற்றி கேட்டறிந்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளிடம் அவர்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் வரை கேட்டு அறிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் நாள் சந்திப்பின்போது ‘‘நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் அருகில் சேர்க்க மாட்டேன்!’’ என்று சொன்னது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “அவர் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவரது விருப்பம். வந்தால் வரவேற்போம்!” என்றார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், பாஜகவுக்கு வந்தாலும் வரவேற்போம்!’’ என்றார்.
இது முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் “சாதாரணமாக ஒரு நிகழ்ச்சியில் தாமரையை வைத்தாலே அது அரசியல் சின்னமாக பார்க்கப்படும் சூழலில், ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி ஏன் ‘பாபா’ படத்தில் பயன்படுத்திய அபான முத்திரைக்கு நடுவே தாமரையை வைக்க வேண்டும்? அரசியலுக்கு வந்ததும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிப்பாரோ?” என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
கருணாநிதி இருக்கும்போது..
சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி இருந்த ஒரு மேடையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, ‘கருணாநிதி ஒரு அரசியல் ஜாம்பவான். அவர் இருக்கும்போது நான் அரசியலுக்கு வருவது நல்லதாக இருக்காது!’’ என்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இடமும், உடல்நலமில்லாமல் ஓய்வில் இருக்கும் கருணாநிதியின் இடமும் அரசியலில் காலியாக இருக்கும் இந்த சூழலைவிட தலைவருக்கு நல்ல ஒரு வாய்ப்பு இனி எப்போதும் கிடைக்காது என்பது ரஜினி ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த கருத்தை ரஜினியிடம் நேற்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைபோல ஆன்மீகம், ஜோதிடக் கணிப்பு ஆகிய விஷயங்களை ரஜினியும் வெகுவாக நம்பக்கூடியவர். அப்படி பார்க்கும்போது கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்றே கணிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவரது விசுவாசிகள் சிலர் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் இதுபற்றி ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர்.
ரஜினியின் அரசியல் பார்வை குறித்து அவருக்கு நெருக்கமாக உள்ள திரைப்பிரபலம் ஒருவர் கூறும்போது, ‘எப்போதுமே தன்னைப் பற்றி வரும் எல்லா செய்திகளையும் அவர் கவனிப்பார். மற்றவர்கள் சொல்வதையும் கவனமாக கேட்டுக்கொள்வார். ஆனால், எந்த ஒரு விஷயத்திலும் முடிவை அவர் மட்டுமே எடுப்பார். அது என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது அரசியல் விஷயத்திலும் அதுதான் நடக்கும்!’’ என்றார்.
தற்போது ரஜினியின் ரசிகர்களும் அந்த முடிவுக்காகத்தான் காத்திருக்கிறார்கள்.
அடையாள அட்டை விற்பனை?
ரஜினியை சந்திக்க வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பணத்துக்கு விற்பனை செய்திருப்பதாக சில இடங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘ரஜினிகாந்தை சந்திக்க மாவட்டம் தோறும் 250 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவை ஒன்றியத்துக்கு 10 பேருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டது. அப்படி வழங்கும்போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், விண்ணப்பங்களை பணத்துக்காக விற்பனை செய்திருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு குறைவு’’ என்றனர்.