ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக வெளியேறினார் ஷரபோவா- பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் வாய்ப்பை இழந்தார்
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா காயம் காரணமாக 2-வது சுற்றின் பாதியிலேயே வெளியேறினார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஷரபோவா தனது 2-வது சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லூசிக் பரோனியை எதிர்த்து விளையாடினார். இதில் ஷரபோவா 4-6, 6-3, 2-1 என முன்னிலை வகித்த போது காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஷரபோவா ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் லூசிக் பரோனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
30 வயதான ஷரபோவா இந்த தொடரின் 2-வது சுற்றுடன் வெளியேறியதன் மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள விம்பிள்டன் போட்டியின் பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ரோம் டென்னிஸ் போட்டியில் அரை இறுதி வரை ஷரபோவா முன்னேறியிருந்தால் விம்பிள்டன் பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை பெறமுடியும் என்ற நிலை இருந்தது.
வைல்டு கார்டு மறுப்பு
இதற்கிடையே வரும் 22-ம் தேதி தொடங்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்க முடியாது என பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்தால் மட்டுமே வைல்டு கார்டு வழங்க முடியும்.
ஆனால் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர்களுக்கு தகுதி சுற்றிலோ அல்லது பிரதான சுற்றிலோ கலந்து கொள்வதற்கு வைல்டு கார்டு வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. இதனால் ஷரபோவா பிரெஞ்சு ஓபனில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆன்டி முர்ரே தோல்வி
ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில், 29-ம் நிலை வீரரான இத்தாலியின் பபியோ போக்னியை எதிர்த்து விளையாடினார். இதில் போக்னி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் முர்ரேவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 90 நிமிடங்களில் முடிவடைந்தது.
முர்ரே இந்த சீசனில் பெரிய அளவிலான எந்த தொடரிலும் கால் இறுதிக்கு கூட தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனில் அவர் 7-வது தோல்வியை சந்தித்துள்ளார்.
4 முறை சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச் தனது 2-வது சுற்றில் 7-6(7-2), 6-2 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா ஹோன்டா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் யூலியா புடின்ட்செவாவையும், 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் குஸ்நெட்சோவா 6-1, 7-6(7-3) என்ற நேர் செட்டில் செக் குடியரசின் கேத்ரினா ஷினிகோவாவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.