அரசியலில் குதிக்க ரெடியாகிறார் ரஜினி? போர் பிரகடனம் ஏன்?
போருக்கு தயாராக இருக்கும்படி ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
5வது நாளான இன்று தனது சந்திப்பை அவர் நிறைவு செய்தார்.
முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் அரசியல் குறித்து ரஜினி பேசினார். அதேபோல இன்று நிறைவு நாளிலும் ரஜினிகாந்த் அரசியல் கருத்துக்களை பேசினார்.
அதில் நிறைவாக அவர் பேசியதுதான், மீண்டும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. அந்த காலத்தில் எல்லாம் ராஜாக்களிடம் லட்சக்கணக்கான படை பலம் இருக்காது. 10 ஆயிரம், ஐந்தாயிரம் வீரர்களை கொண்ட படைகள் இருக்கும். அவர்களால் நிர்வகிக்கும் அளவுக்குத்தான் படை பலம் இருக்கும்.
ஆனால் போர் என்று வரும்போது நாட்டிலுள்ள ஆண்கள் எல்லோரும் சேர்ந்து வந்து போரிடுவார்கள். அதுவரை பிரஜைகள் தங்கள் வேலைகளைத்தான் பார்ப்பார்கள். கபடி, குஸ்தி, ஜல்லிக்கட்டு இதுபோன்ற வீர விளையாட்டுக்களையெல்லாம் வைத்திருந்ததே ஆண்கள் எப்போதும் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
போர் வரும்போது சுய மானத்திற்காக, மண்ணுக்காக குடிமக்களும் சேர்ந்து போரிடுவார்கள். அந்த மாதிரி, எனக்கும் கடமைகள் இருக்கிறது, தொழில் உள்ளது, வேலை உள்ளது. உங்கள் கடமைகளை செய்யுங்கள். போர் வரும்போது பார்த்துப்போம். ஆண்டவன் இருக்கான். நன்றி. இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.
ரஜினியின் போர் பிரகடனம் என்பது அரசியல் பிரகடன் என்றுதான் பார்க்கப்படுகிறது. இதனால்தான் சுப்பிரமணியன் சாமி அவசரமாக, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞைகள் சமீபகாலமாக தெளிவாக தெரிகின்றன. ஆனால், படத்தின் விளம்பரத்திற்காக ரஜினி வழக்கமாக மக்களை தூண்டிவிடும் முயற்சியோ என்ற சந்தேகத்தை சமூக வலைஞர்கள் எழுப்புவதை புறம் தள்ளவும் முடியவில்லை. ஆனால், வழக்கத்தைவிட அதிகமாக சு.சாமி போன்றோர் ரஜினிக்கு எதிராக சாடுவதை பார்க்கும்போது, இது வழக்கம்போலான, வெற்றுப் பேச்சாக இருக்காது என்ற எண்ணம் பரவலாக எழுந்துள்ளது.
ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் போன்றோரையெல்லாம் குறிப்பிட்டு பேசி பாராட்டிய ரஜினி, இவர்கள் இருந்தும் சிஸ்டம் சரியில்லை என கூறிவிட்டார். எனவே சிஸ்டத்தை சரி செய்ய நான் அரசியலுக்கு வருவேன் என்பதுதான், ரஜினி சொல்ல வரும் சேதி. இதில் கவனிக்கப்பட வேண்டிய தகவல், போர் வரும்வரை ரெடியாக இருங்கள் என்கிறார்
கருணாநிதி உடல் நலம் குன்றிய நிலையில், ஜெயலலிதா இல்லாத சூழலில், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறியுள்ள இந்த நிலையைவிடவா வேறு ஒரு போர்க்காலம் தேவை என்பதே நடுநிலையாளர்கள் கேட்கும் கேள்வி. இதைவிட மோசமான சூழல் இனி எப்போது வரும் என ரஜினி கருதியுள்ளார்? இதுதான் மோசமான சூழல் என கருதினால் உடனே அரசியலுக்க வரலாமே? அப்படியானால் ரஜினி பேசுவது சினிமா ஸ்டன்ட்தானா என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.