டிரைவிங் ஸ்கூல் மூலம் வாகன தகுதிச் சான்று: வருகிறது புதிய திட்டம்
அங்கீகரிக்கப்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் ஆய்வு செய்த பின்பே வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கும் புதிய திட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி ஒரு வாகனத்தின் தகுதிச் சான்று செல்லத்தக்கதாக இருந்தால் மட்டுமே, அவை பதிவு செய்யப்பட்டவையாக கருதப்படும். இருசக்கர வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு தகுதிச் சான்று செல்லும். அதன்பின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மூன்று மற்றும் நான்கு சக்கர புதிய வாகனங்களுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்று 2 ஆண்டுகளுக்கு செல்லும். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும்.
தற்போதைய நடைமுறையில் வாகனங்களுடன் நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று தகுதிச் சான்றை புதுப்பித்து கொள்ளலாம். புகை பரிசோதனை, வாகனத்தின் பராமரிப்பை உறுதி செய்தபின் தகுதிச் சான்று வழங்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் ஆர்.சி., புத்தகம், லைெசன்ஸ் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு வருகிறது.
அதேபோல் தகுதிச் சான்று வழங்கும் முறையிலும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தகுதிச் சான்றை புதுப்பிக்க வரும் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். போக்குவரத்து அதிகாரிகள் தகுதிச் சான்று மட்டும் வழங்கினால் போதும்; வாகனங்களை ஆய்வு செய்ய தேவையில்லை. இதற்காக மாவட்டந்தோறும் சில டிரைவிங் ஸ்கூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக,வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.