மின் கட்டணம் வசூலிக்க விரைவில் ‘மொபைல் வாலட்’
டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் வசூலிக்க, தனியார் நிறுவனம் மூலம், ‘மொபைல் வாலட்’ சேவையை, மின் வாரியம் துவக்க உள்ளது. மின் கட்டண வசூல், ‘டெண்டர்’ கேட்பு வைப்புத் தொகை உள்ளிட்ட பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும்படி, மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய மின் துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. ஆனாலும், மின் கட்டண மையங்களில், ‘டெபிட் கார்டு’ மூலம் கட்டணம் வசூலிக்கும் சேவையை, மின் வாரியம் இதுவரை துவக்கவில்லை.
மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில், மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு, இம்மாத துவக்கத்தில், டில்லியில் நடந்தது. இதில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு, மாநில மின் வாரியங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய மின் துறை அதிகாரிகள் விவாதித்து உள்ளனர். இதையடுத்து, தனியார் நிறுவனம் மூலம், ‘மொபைல் வாலட்’ சேவையை, மின் வாரியம் துவக்க உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவுரைப்படி, மின் கட்டண மையங்களில், வங்கிகள் உதவியுடன், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வைத்து, டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்க, உயரதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். சிலரின் அலட்சியத்தால், அத்திட்டம் துவக்கப்படவில்லை. மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில், டிஜிட்டல் பரிவர்த்தனையை துவக்க, ஆலோசனை வழங்கப்பட்டதால், உடனே அதை துவக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மின் வாரியம் சொந்தமாக, ‘மொபைல் ஆப்’ உருவாக்க, அவகாசம் தேவை.அதற்கு காத்திராமல், தனியார் உதவியுடன், ‘மொபைல் வாலட்’ மூலம், மின் கட்டணம் வசூலிக்கும் சேவை, விரைவில் துவக்கப்பட உள்ளது.அதன்படி, மின் நுகர்வோர், ஒப்பந்த நிறுவனத்தின், ‘ஆப்’பில், டிஜிட்டல் முறையில் பணத்தை ஏற்றி, அதன் வழியாக, மின் கட்டணத்தை செலுத்தலாம். இது குறித்த, அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதுவரை, போலி மொபைல் ஆப் மூலம், யாரும் மின் கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.