காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: வருமானவரித் துறை தகவல்
காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரி செலுத்த காளீஸ்வரி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. விதிகளின் படி 107% வரியை காளீஸ்வரி நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காளீஸ்வரி நிறுவனம் பிரபல கோல்டு வின்னர் சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், காளிமார்க் குளிர்பானம் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பிரபல தனியார் நிறுவனம் காளீஸ்வரி. இந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர் உள்பட 54 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 17-ம் தேதியன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 17-ம் தேதியன்று காலை சுமார் 6.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், உரிமையாளர் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த இந்த சோதனை, மூலப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதா? மற்றும் முறையான வருமானவரி தாக்கல் செய்துள்ளனரா? என்ற கோணத்தில் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. மேலும், இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தனர். இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது.