குஜராத்தில் 52 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது, நிறுவனம் 49-வது முறை கடத்தலில் ஈடுபட்டபோது சிக்கியது
டெல்லியில் கடந்த 13–ந் தேதி வருவாய் புலனாய்வு துறையினரின் பிடியில் 44 கிலோ தங்கம் சிக்கியது. விசாரணையில் தங்கம், ‘பரம் எக்குயிப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்காக கடத்திக்கொண்டு வரப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றியதுடன், அந்த நிறுவனத்தின் அதிபரான ஹர்னெக் சிங்கை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்துக்கு மேலும் தங்க கட்டிகள் கடத்திக்கொண்டு வரப்பட இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு காந்திதாம் பிராந்திய வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர கண்காணிப்பு, சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். சோதனையின் போது, முட்டை இன்குபேட்டரில் தங்க கட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. 52 கிலோ எடை உள்ள தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வருவாய் புலனாய்வுத்துறையினர் கைப்பற்றினார்கள். இந்த தங்க கட்டிகள், சர்வதேச சந்தையில் ரூ.15 கோடி மதிப்பிலானவை.
இந்த தகவல்களை காந்திதாம் பிராந்திர வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் எச்.கே. சிங் காந்திதாமில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
‘பரம் எக்குயிப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் அதிபர் ஹர்னெக் சிங், இப்படி தங்கத்தை கடத்திக்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி அவரது நிறுவனத்துக்காக 49–வது முறையாக கடத்திக்கொண்டு வரப்பட்டதுதான் இப்போது முந்திரா துறைமுகத்தில் பிடிபட்டுள்ள 52 கிலோ தங்க கட்டிகள். ஹர்னெக் சிங்கின் உறவினர்கள் துபாயில் வசிக்கின்றனர். அவர்களுக்கு, இவர் ஹவாலா (சட்ட விரோத பண பரிமாற்றம் செய்வோர்) மூலமாக பணம் அனுப்பி, இப்படி தங்கத்தை கடத்தி கொண்டு வந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது என்று எச்.கே. சிங் கூறிஉள்ளார்.