ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த அலைமோதும் கூட்டம்
ஜெயலலிதா மறைந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும், அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட்டம் அலைமோதி வருகிறது.
ஜெயலலிதா சமாதி
தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5–ந்தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு வருபவர்கள் சிலர் ஜெயலலிதா சமாதியிலும், மனம் உருகி அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் சூழலிலும், ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.
அலைமோதிய கூட்டம்
பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெண்கள், தள்ளாடும் வயதில் மூத்த குடிமக்கள், இளைஞர்கள், மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வருகின்றனர். ஜெயலலிதா மறைந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் அவரை நினைவு கூர்ந்து சமாதியில் அஞ்சலி செலுத்த கூட்டம் அலைமோதுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெயலலிதா சமாதியில் வழக்கத்துக்கு மாறாக கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா சமாதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்தை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சிலர் தங்களை அறியாமலேயே தேம்பி, தேம்பி அழுதவாறு சென்றதையும் காணமுடிந்தது.
ஜெயலலிதா பாட்டி
பேரப்பிள்ளைகளை சுமந்து வந்த மூதாட்டிகள், ‘இதுதான் ஜெயலலிதா பாட்டியின் நினைவிடம் கும்பிட்டுக்கொள்’ என்று செல்லமாக கூறியதையும் கேட்க முடிந்தது. உள்கட்சி பூசலால் அ.தி.மு.க. கட்சி அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மற்றும் அம்மா அணி என 2 ஆக உடைந்துள்ளது. பிளவுப்பட்ட இந்த 2 அணிகளும் இணையவேண்டும் என்று அ.தி.மு.க. கட்சி தொண்டர்கள் சிலர் ஜெயலலிதா சமாதியில் மனம் உருக வேண்டிக்கொள்வதையும் காணமுடிந்தது.
‘‘ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை ஒருபோதும் யாராலும் மறக்க முடியாது. அதனால் அவரை எப்போதும் நினைவு வைத்துக்கொள்வோம்’’ என்று அஞ்சலி செலுத்த வந்தவர்கள் சிலர் தெரிவித்தனர். சாதாரண நாட்களில் சராசரியாக 15 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் நாள் ஒன்றுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.ஜி.ஆர். நினைவிட வளாகம் கண்காணிப்பு கேமரா வளையத்தில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.