ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ஜோகோவிச், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை 6-1, 6-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் 4 முறை பட்டம் வென்றுள்ள ஜோகோ விச், இம்முறை ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவை எதிர்த்து விளையாட உள்ளார். 20 வயதான ஜிவெரேவ் அரை இறுதியில் 6-4, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வீழ்த்தினார்.
அலெக்சாண்டர் ஜிவெரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. மேலும் குறைந்த வயதில் ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2-வது வீரர் என்ற பெரு மையை அவர் பெற்றார். இதற்கு முன்னர் கடந்த 2007-ம் ஆண்டு ஜோகோவிச் தனது 19 வயதில் இறுதிப் போட்டியில் கால்பதித்ததே சாதனையாக உள்ளது. தரவரிசை யில் 17-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் ஜிவெரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அலெக்சாண்டர் ஜிவெரேவ் நுழையக்கூடும்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார். இதில் 1-4 என முகுருசா பின்தங்கிய நிலையில் இருந்த போது கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார்.
22 நிமிடங்களே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட எலினா ஸ்விட்டோலினா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் ருமேனியாவின் சிமோனா ஹாலப்பை எதிர்த்து விளையாடுகிறார்.