இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாதவின் தண்டனை நிறுத்தி வைப்பு: பாக்., தூதர்
சர்வதேச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என பாக்., தூதர் அப்துல் பாஷித் தெரிவித்தார்.
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூசன் ஜாதவை, உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016ம் ஆண்டு பலுசிஸ்தானில் பாக்., கைது செய்தது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த தி ஹேக்நகரில் உள்ள சர்வதேச கோர்ட், ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பாக்., தூதர் அப்துல் பாஷித் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: சர்வதேச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை, குல்பூசன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற மாட்டோம். அதுவரை அவர் பாதுகாப்பாக இருப்பார். இதுகுறித்து இந்தியா அச்சப்பட தேவையில்லை.
பாதுகாப்பு விஷயத்தில் பாக்., எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. உள்நாட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.