மான்செஸ்டரில் குண்டு வெடிப்பு; 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாயினர்; 50 பேர் படுகாயம் அடைந்தனர்.இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடினர். இக்குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் பலியாயினர். 50 பேர் படுகாயமடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரங்கத்தில் குண்டு வெடித்த போது, இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்துவிட்டதாக, குண்டு வெடிப்பில் தப்பித்தவர்கள் தெரிவித்தனர். இது மனிதவெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இக்குண்டு வெடிப்பில் பலர் காணாமல் போனதாகவும், காணாமல் போனவர்களை கண்டறிய @gmpolice எனும் டுவிட்டர் அக்கவுண்டை பயன்படுத்துமாறும், அவரச தொடர்புக்கு : 01618569400 என்ற எண்ணை பயன்படுத்துமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு இங்கிலாந்து நேரப்படி நேற்று(மே 22) நள்ளிரவு 10.30 மணிக்கு நடந்தது.