புரோ கபடி லீக் 5-வது சீசன்: நித்தின் தோமர் ரூ.93 லட்சத்துக்கு ஏலம்
புரோ கபடி லீக் 5-வது சீசனுக்காக நித்தின் தோமரை ரூ.93 லட்சத்துக்கு உத்தரபிரதேச அணி ஏலம் எடுத்துள்ளது.
புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்குகிறது. 12 நகரங்களில், 130 ஆட்டங்கள் என 13 வார காலம் இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த சீசனுக்கான ஏலம் டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நித்தின் தோமரை அதிகபட்ச தொகையாக ரூ.93 லட்சத்துக்கு உத்தரபிரதேச அணி ஏலம் எடுத்தது. அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சமாகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
புரோ கபடி லீக்கின் முதல் சீசனில் அதிகபட்ச தொகையாக ராகேஷ் குமார் ரூ.12.80 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். தற்போது இதை விட 626 மடங்கு கூடுதலாக நித்தின் தோமர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இவரை தவிர ரோஹித் குமார் ரூ.81 லட்சத்துக்கு பெங்களூரு அணியாலும், மன்ஜித் சில்லார் ரூ.75.5 லட்சத்துக்கு ஜெய்ப்பூர் அணியாலும், சுர்ஜித் சிங் ரூ.73 லட்சத்துக்கு பெங்கால் அணியா லும், செல்வமணி ரூ.73 லட்சத்துக்கு ஜெய்ப்பூர் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். முதல் நாள் ஏலத்தில் 60 வீரர்கள் ரூ.27.27 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களில் ஈரானின் அபோசர் மோகஜர்மயானியை ரூ.50 லட்சத்துக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது. இதே நாட்டை சேர்ந்த அபோல்பசல் மாக்சோட்லோ ரூ.31.8 லட்சத்துக்கு டெல்லி அணியாலும், பர்ஹத் ரஹிமி மில்கார்தன் ரூ.29 லட்சத்துக்கு தெலுகு டைட்டன்ஸ் அணியாலும், ஹடி ஓஷோடாக் ரூ.18.6 லட்சத்துக்கு மும்பை அணியாலும் தாய்லாந்தின் கோம்சான் ரூ.20.4 லட்சத்துக்கு ஹரியாணா அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.