கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் வாடிகனில் போப் ஆண்டவருடன் டிரம்ப் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு முதல் முறையாக அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி, இஸ்ரேல், பாலஸ்தீனம் சென்று விட்டு, அவர் நேற்று வாடிகன் போய்ச் சேர்ந்தார்.அங்கு அவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தல அரண்மனையின் நூலகத்தில் சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் சந்தித்துப்பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பின்போது, டிரம்பின் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜார்ட் குஷ்னர் ஆகியோரும் உடனிருந்தனர். போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும், டிரம்பும் சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது. குடியேற்றம், தடையற்ற முதலாளித்துவம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சுக்கும், ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதும், இருவரும் மோதிக்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று மரண தண்டனை, ஆயுத வர்த்தகம் போன்றவற்றிலும் அவர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. அதே நேரத்தில் இருவரும் கருக்கலைப்புக்கு எதிரானவர்கள்.
டிரம்புடனான சந்திப்பை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முடித்துக்கொண்டு, புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் வாராந்திர மக்கள் சந்திப்புக்காக சென்றார்.