பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சரத்குமார் மனு
சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய் மற்றும் இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார்.
தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் மனு தாக்கல் செய்துள்ளார்.