மினி உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா 2017
‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) 1998–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கிரிக்கெட்டில் உலக கோப்பைக்கு அடுத்த மிகப்பெரிய போட்டி இது தான். 8–வது மினி உலக கோப்பை போட்டி வருகிற 1–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. அதற்கு முன்பாக இதுவரை நடந்துள்ள மினி உலக கோப்பை போட்டியை பற்றி ஒவ்வொரு நாளாக அலசலாம்.
டெஸ்ட் போட்டி விளையாடாத நாடுகளில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக நலநிதி திரட்ட குறுகிய கால தொடர் ஒன்றை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. அப்போது ஐ.சி.சி. தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியாவின் யோசனையில் உதயமான முதலாவது மினி உலக கோப்பை போட்டியில் டெஸ்ட் விளையாடும் அணிகள் மட்டும் (9) பங்கேற்றன. கிரிக்கெட்டை பிரபலமடையச் செய்யும் நோக்கில் வங்காளதேசத்திற்கு போட்டியை நடத்தும் உரிமம் வழங்கப்பட்டது. அந்த சமயம் வங்காளதேசம் டெஸ்ட் அந்தஸ்து பெறாததால் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. வில்ஸ் சர்வதேச கோப்பை என்று அதிகாரபூர்வமாக முதலில் அழைக்கப்பட்டாலும் நாளடைவில் சாம்பியன்ஸ் கோப்பை என்ற பெயருடன் நிலைப்பெற்று விட்டது.
‘நாக்–அவுட்’ சுற்று அடிப்படையில் வெறும் 8 ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டன. கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தும், ஜிம்பாப்வேயும் சந்தித்தன. இதில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 259 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்துக்கு கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட போது, கிறிஸ் ஹாரிஸ் கைகொடுத்தார். கடைசி பந்தில் 3 ரன் தேவையாக இருந்த போது, ஹாரிஸ் (21 பந்தில் 37 ரன்) பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார்.
அதைத்தொடர்ந்து கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் 300 ரன்களை கடந்த ஒரே அணி இந்தியா தான். சச்சின் தெண்டுல்கர் 141 ரன்களும் (128 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) அஜய் ஜடேஜா 71 ரன்களும் விளாசினர். 300–வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற கேப்டன் அசாருதீன் டக்–அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா 48.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோல்வி கண்டது. பேட்டிங்கில் அசத்திய தெண்டுல்கர் சுழற்பந்து வீச்சிலும் முத்திரை பதித்தார். அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வானார்.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் பதம் பார்த்தன.
இந்திய அணி அரைஇறுதியில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுரவ் கங்குலி 83 ரன்களும், ராபின்சிங் 73 ரன்களும் எடுத்தனர். முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ தெண்டுல்கர் 8 ரன்னில் கேட்ச் ஆனார். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிலோ வாலஸ் (39 ரன்) ஸ்ரீநாந்த் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிர்ச்சியில் உறைய வைத்தார். ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாண்ட வெஸ்ட் இண்டீஸ் 15 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. சந்தர்பால் (74 ரன்), கேப்டன் பிரையன் லாரா (60 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை குறுக்கிட்ட மற்றொரு அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தென்ஆப்பிரிக்கா– வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இறுதிப்போட்டி டாக்காவில் அரங்கேறியது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 49.3 ஓவர்களில் 245 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. வாலஸ் (103 ரன், 11 பவுண்டரி, 5 சிக்சர்), கார்ல் ஹூப்பர் (49 ரன்) தவிர மற்றவர்கள் ஜொலிக்கவில்லை. 7–வது பவுலராக பயன்படுத்தப்பட்ட தென்ஆப்பிரிக்க ஆல்–ரவுண்டர் காலிஸ் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 246 ரன்கள் இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 47 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் மகுடத்தை சூடியது. கேப்டன் ஹன்சி குரோனே 61 ரன்களுடன் களத்தில் நின்று வெற்றிக்கு வித்திட்டார். இந்த நாள் வரைக்கும் தென்ஆப்பிரிக்கா வென்ற ஒரே ஐ.சி.சி. கோப்பை இது தான். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை காலிஸ் (164 ரன் மற்றும் 8 விக்கெட்) பெற்றார்.