அமெரிக்காவில் யோகா பயிற்சியாளர் கைது
அமெரிக்க வாழ் இந்தியரான, சர்ச்சைக்குரிய யோகா பயிற்சியாளர், பிக்ரம் சவுத்திரியை கைது செய்ய, அந்நாட்டு கோர்ட், ‘வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின், பல முக்கிய இடங்களில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தவர், பிக்ரம் சவுத்திரி, 69. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தன் சிறப்பான பயிற்சிகளால், உலகம் முழுவதும் பிரபலமானார்.விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள் போன்ற பிரபலங்கள், இவரிடம் யோகா பயிற்சி பெற்றனர். உலகின் பல இடங்களில் கிளைகளை நிறுவிய இவர் மீது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் எழுப்பினார்.
யோகா கற்கச் சென்ற தன்னை, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அந்தப் பெண் புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு, பிக்ரம் சவுத்திரிக்கு, 45 கோடி ரூபாய் அபராதம் விதித்த கோர்ட், அவரை ஜாமினில் விடுவித்தது.
இந்நிலையில், அபராதத்தை செலுத்தாமல், பிக்ரம் சவுத்திரி தலைமறைவாகிவிட்டதாக, அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை கைது செய்ய, அமெரிக்க கோர்ட், கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.