கும்பிளேவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை: இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்
புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ள கிரிக்கெட் வாரியம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
கும்பிளேவின் பதவி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்பிளே ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது.
பயிற்சியாளர் பொறுப்பில் அவர் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
ஆலோசனை கமிட்டி தேர்வு செய்யும்
கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கும்பிளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் வருகிற 31–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணலை நடத்தி இந்திய அணியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுதிவாய்ந்த பயிற்சியாளரை தேர்வு செய்யும். இதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன.
பயிற்சியாளர் தேர்வு நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் பிரதிநிதி கண்காணிப்பார். தற்போதைய பயிற்சியாளர் கும்பிளே, நேர்காணலில் நேரடியாக பங்கேற்பார்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதான கும்பிளேவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி உள்ளூர் சீசனில் 13 டெஸ்டில் விளையாடி 10–ல் வெற்றியும், 2–ல் டிராவும், ஒன்றில் தோல்வியும் கண்டது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்று ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டி பிரமிக்க வைத்தது.
அதிருப்தி ஏன்?
ஆனால் கும்பிளேவின் தனிப்பட்ட செயல்பாடு கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்பாக கும்பிளே வீரர்களின் ஊதியம் தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினரை சந்தித்து பேசினார். கேப்டன் விராட் கோலி, ‘ஸ்கைப்’ மூலம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். தற்போது ஒப்பந்தத்தில் உள்ள ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம் ரூ.2 கோடியை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று முறையிட்டனர்.
பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரை உதவி பயிற்சியாளராகவும், ஜாகீர்கானை பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும் என்றும் கும்பிளே வலியுறுத்தினார்.
கும்பிளேவுக்கு ஓராண்டு சம்பளமாக ஏறக்குறைய ரூ.6¼ கோடி வழங்கப்படுகிறது. அதை ரூ.7½ கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன் காரணமாகத்தான் அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவரும் மீண்டும் பயிற்சியாளர் பதவியை பெறுவதற்கான போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.