சூர்யா, சரத்குமார் உள்பட 8 நடிகர்களுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்த கூடாது; ஐகோர்ட்டு உத்தரவு
சென்னையில் 2009–ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதற்கு நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, நடிகர் சங்கத்தில் கூட்டத்தை நடத்தினர். அப்போது, பத்திரிகையாளர்களை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் அவதூறாக பேசியதாக ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை ஊட்டி குற்றவியல் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
பிடிவாரண்டு
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஊட்டி மாஜிஸ்திரேட்டு, 8 நடிகர்களும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். ஆனால் விசாரணைக்கு நடிகர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்டை மாஜிஸ்திரேட்டு பிறப்பித்ததுடன், விசாரணையை ஜூன் 17–ந்தேதி தள்ளி வைத்தார்.
இந்த பிடிவாரண்டை திரும்ப பெறக்கோரி ஊட்டி கோர்ட்டில் நடிகர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ரத்து
எனவே ஊட்டி கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் அவசர வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கோடை விடுமுறை கால நீதிபதி எஸ்.விமலா நேற்று மாலை விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் மீது சிவகங்கை, திருச்சி, பழனி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள கோர்ட்டுகளில் அவதூறு வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி நடிகர்கள், ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஐகோர்ட்டு விசாரித்து, இந்த வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
அமல்படுத்தக்கூடாது
ஆனால், ஊட்டி கோர்ட்டில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ஊட்டி கோர்ட்டு, நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது.
தற்போது இந்த வழக்கின் தன்மையை ஆராய்ந்து, ஊட்டி கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடுகிறேன். பிடிவாரண்டு உத்தரவை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அமல்படுத்தக்கூடாது என்று ஊட்டி கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறேன். இந்த மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.