பா.ரஞ்சித் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘காலா’; நடிகர் தனுஷ் அறிவிப்பு
ரஜினிகாந்த், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தை முடித்து விட்டு அடுத்த புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் கடந்த வருடம் ‘கபாலி’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைகிறார்கள்.
இது, ரஜினிகாந்துக்கு 164-வது படம் ஆகும். தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். நாளை மறுநாள் (28-ந் தேதி) மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்துக்கு என்ன பெயர் சூட்டுவது என்று படக்குழுவினர் ஆலோசித்து வந்தனர். இயக்குனர் பா.ரஞ்சித் பல்வேறு பெயர்களை பரிசீலித்தார். இறுதியில் ‘காலா’ என்ற பெயரை தேர்வு செய்து ரஜினிகாந்தின் புதிய படத்துக்கு சூட்டியிருப்பதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
ஜோடி ஹூமா குரேஷி
ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க முதலில் வித்யாபாலனை முடிவு செய்து அவரிடம் கால்ஷீட் இல்லாததால், இந்தி நடிகை ஹூமா குரேஷியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே, சோனாக்சி சின்ஹா, ராதிகா ஆப்தே ஆகிய இந்தி நடிகைகள் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘காலா’ படம் மும்பை பின்னணியில் அதிரடி படமாக உருவாகிறது. மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது.
எதிர்ப்பு
ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஹாஜி மஸ்தான் வாழ்க்கை கதை அல்ல என்றும், மும்பை பின்னணியில் தயாராகும் கற்பனை கதை என்றும் பட நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருந்தது.
‘காலா’ படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறும்போது, “கரிகாலன் என்ற பெயரின் சுருக்கம்தான் ‘காலா’. திருநெல்வேலி பகுதியில் இந்த பெயர் பிரபலம். காலன், எமன், தூதன் என்பதையும் இது குறிக்கும். திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் மும்பையில் வாழ்கிறார்கள். அவர்களை பற்றிய படம் என்பதால் இந்த பெயரை வைத்து இருக்கிறோம்” என்றார்.