ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?
ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால்.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால்.
ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, “த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் ஆஃப் 9/11 மாஸ்டர்மைண்ட்ஸ் லைஃப் புத்தகத்திற்காக, அமால் அவர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். “சண்டே டைம்ஸ் யூ.கே” -இல் இந்த புத்தகத்தின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.
2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு நேர தொழுகைக்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவிட்டனர். இரவு 11 மணி இருக்கும், ஒசாமா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.
பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் ரகசியமாக மறைந்து வாழ்ந்த வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நள்ளிரவு நேரம், அமாலின் மனதில் காரணமே இல்லாமல் ஏதோ கலக்கம் ஏற்பட்டு தூக்கம் கலைந்தது. ஏதோ சப்தம் கேட்டதாக தோன்றினாலும், அது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே மாடியில் யாரோ ஏறுவது போல தோன்றியதால் அமாலுக்கு கவலை ஏற்பட்டது. உன்னிப்பாக கவனித்தார்.
மின்சாரம் இல்லாமல், இருள் சூழ்ந்த நள்ளிரவாக இருந்தாலும், யாரோ கடந்து போனது நிழல் போல தெரிந்தது. சப்தங்கள் அதிகமானது, ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்தபோது, அன்னியர்கள் நுழைந்துவிட்டார்களோ என்ற அமாலின் சந்தேகம் உறுதியானது.
இதற்கிடையில் படுக்கையில் படுத்திருந்த ஒசாமா பின்லேடனும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். அவர் முகத்தில் அச்சம் நிலவியது அப்பட்டமாக தெரிந்தது. கணவர் தன்னை பிடித்துக் கொண்டதாக கூறும் அமால், “எங்களை யாரோ உற்றுப்பார்ப்பது போலவும், மேலே ஆட்கள் ஓடுவது போலும் உணர்ந்தேன். சட்டென்று நாங்கள் இருவரும் அங்கிருந்து எகிறி குதித்து ஓடினோம். எங்கள் வீட்டின் சுவர்கள் அதிர்ந்தன.
”பால்கனியை ஒட்டியிருந்த கதவின் வழியாக பார்த்தோம், அவர்கள் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே இருந்ததை பார்த்துவிட்டோம். சில நிமிடங்களில் மற்றொரு ஹெலிகாப்டரும் வந்துவிட்டது. அத்துடன், அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு குழுவும் அவர்களுடன் இணைந்து கொண்டது”, என்று மறக்கமுடியாத அந்த இரவை பற்றி அமால் வர்ணிக்கிறார்.
யாரோ தங்களை ஏமாற்றிவிட்டதை அவர்கள் உணர்ந்ததாக தோன்றியதாக, ஒசாமாவின் கடைசி நிமிடங்கள் பற்றிய புத்தகத்திற்காக கொடுத்த பேட்டியில் அமால் சொல்கிறார். பல ஆண்டுகளாக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்த அந்த வீடே தங்களுக்கு மரணப்பொறியாக மாறிவிட்டது என்கிறார் அமால்.
ஒசாமா பின்லேடனின் நான்கு மனைவிகளில் மூன்று பேரும், குழந்தைகளும் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கையறைக்குள் வந்துவிட்டார்கள், என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை, அனைவரும் தொழுகை செய்தார்கள். வழக்கமான தொழுகைக்கும், அன்றைய கனத்த இரவின் தொழுகைக்கும் இருந்த ஒரே வித்தியாசம், அது ஒசாமாவின் கடைசித் தொழுகையாக இருந்தது என்பது தான்.
பிறகு குடும்பத்தினரிடம் பேசிய ஒசாமா, ”அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான் உங்களை அல்ல” என்று சொன்னதுடன், மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்லுமாறு கூறினார். இருந்தபோதிலும், தனது மகன் ஹுசைனுடன் ஒசாமாவின் அருகிலேயே இருக்க அமால் முடிவு செய்தார்.
”ஹெலிகாப்டரின் ஓசையால் அவருடைய உறக்கம் கலைந்துவிட்டது. அமெரிக்கா தன்னை சுற்றிவளைத்துவிட்ட்து என்பதை அவர் உணர்ந்துவிட்டார். வீட்டைச் சுற்றி வளைத்தவர்கள் பால்கனிக்குள் வந்துவிட்டார்கள். சப்தங்கள் அதிகமாயின, ஒரு கட்டத்தில் வீடே அதிர தொடங்கியது, அதோடு எங்களது மன அதிர்வும் அதற்கு குறைந்ததாக இல்லை” என்கிறார் அமால்.
வானில் நிலவில்லாத அந்த இரவில், மின்சாரமும் இல்லை. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டோம். ஹெலிகாப்டர்கள் வருகை, ஆட்கள் நடக்கும் சப்தம், வீடு அதிர்வது, எல்லாம் நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியது. அமெரிக்க ராணுவத்தினர் எங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டார்கள். செஹம் மற்றும் காலித் இருவரும் அமெரிக்கர்களை நெருக்கத்தில் பார்த்துவிட்டார்கள்”.
தங்கள் இருப்பிடத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் யாரோ அமெரிக்காவிற்கு தெரிவித்துவிட்டார்கள், இல்லையென்றால் இது என்றுமே சாத்தியமாகியிருக்காது என்று கூறுகிறார் அமால்.
”யாரோ எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. இப்படி சுற்றிவளைக்கப்படுவோம் என்று எங்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை”.
ஒசாமா பின்லேடன் காலிதை அழைத்தார். அவன் ஏ.கே-47 துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டான். 13 வயதே நிரம்பிய காலிதுக்கு துப்பாக்கியை இயக்கத் தெரியாது என்பது அமாலுக்கு தெரியும். குழந்தைகள் அழுதன. அமால் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அமெரிக்கா ராணுவத்தினர் மேல் மாடிக்கு வந்துவிட்டனர். அதன்பிறகு அனைத்தும் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது.