சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன்: சீனாவிடம் இந்தியா தோல்வி
சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் இந்தியா 0-3 என்ற கணக்கில் 10 முறை சாம்பியன் பட்ட வென்ற சீனாவிடம் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா – சீனா அணிகள் நேற்று மோதின. முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி, 2-ம் நிலை ஜோடியான லு ஹாய், ஹுவாங் யாக்கியோங் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-16, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது. இதையடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காந்த், ஒலிம்பிக் சாம்பியனான ஷென் லாங்குடன் மோதினார். வெறும் 48 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷென் லாங் 21-16, 21-17 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
இரு தோல்விகளால் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் இந்தியா 0-2 என பின்தங்கியது. இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ரெட்டி ஜோடி, சீனாவின் ஹைபெங், ஜாங் நன் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 9-21, 11-21 என்ற நேர் செட்டில் தோல்வி கண்டது. இந்த ஆட்டம் 29 நிமிடங்களிலேயே முடி வடைந்தது.
3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சீன அணி அரை இறுதிக்கு முன்னேறியதால் கடைசியாக நடைபெற இருந்த சிந்து – பிங்ஜியோ ஆகியோர் இடையிலான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் மற்றும் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி – யிசின் பாவ், டாங்க் ஜின்ஹூவா ஜோடி இடையிலான மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்திய அணி சுதிர்மான் கோப்பையில் இதுவரை கால் இறுதியை தாண்டியதில்லை. கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற கால் இறுதியிலும் சீனாவிடமே இந்திய அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. இம்முறையும் அந்த அணியிடமே இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.