வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை
தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப், தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பிரதீப் வி.பிலிப் கூறியதாவது:-
சிலைகள் கடத்தல்
தமிழக கோவில்களில் இருந்து மிகவும் பழமையான சிலைகள் திருடப்பட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று கோடிக்கணக்கில் விலைபேசி விற்கப்பட்டு உள்ளது. 2002-ம் ஆண்டு விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து 6 கற்சிலைகள் திருடப்பட்டன. இந்த கற்சிலைகள் சுமார் 1,300 வருடங்கள் பழமையானவை.
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்தான் இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்றுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், மேலும் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நரசிம்மி என்ற சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 4 சிலைகள்
நரசிம்மி சிலையை மட்டும் ரூ.1.49 கோடிக்கு விற்றுள்ளனர். இந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு சென்னைக்கு கொண்டு வந்துள்ளோம். இதேபோல் கடத்தப்பட்ட இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, விநாயகர் ஆகிய 4 சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அதனையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அர்த்தநாரீஸ்வரர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு சென்னைக்கு கொண்டு வந்துள்ளோம். அந்த சிலை ரூ.1.36 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
நரசிம்மி சிலை திருட்டுபோய் 15 வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், துணை சூப்பிரண்டுகள் சுந்தரம், ரமேஷ், அசோக் நடராஜன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். நரசிம்மி சிலை விருத்தாசலம் கோர்ட்டு மூலம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநுட்பம்
நரசிம்மி சிலை மீட்கப்பட்டது தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறியதாவது:-
நரசிம்மி கற்சிலை 210 கிலோ எடை கொண்ட மிகவும் கலைநுட்பம் வாய்ந்தது. சோழ பேரரசி செம்பி மகாதேவி இந்த சிலையை நிர்மாணித்துள்ளார். சிவனடியாரான அவர் 9 கோவில்களை கட்டியுள்ளார். செம்பி மகாதேவிக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கோவிலில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையையும் திருடி சென்றுவிட்டனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட பழமையான சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.
ரூ.1,000 கோடி
தமிழகத்தில் இருந்து ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஏராளமான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். எங்களது விசாரணையில் சிங்கப்பூரில் உள்ள கலைக்கூடத்தில் தமிழகத்தை சேர்ந்த 18 சிலைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுபாஷ் கபூருக்கு சொந்தமான கலைக்கூடத்தில் மட்டும் 31 சிலைகள் உள்ளது தெரிய வந்தது. அவற்றில் 7 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் உடந்தை
சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் இறந்துவிட்டனர். கோவில்களில் இருந்து சிலைகளை திருட லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று கோடிக்கணக்கில் விற்றுள்ளனர்.
நமது பழங்கால கலை பொக்கிஷமான கோவில் சிலைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றை மீட்கும் நடவடிக்கை தொடரும். சிலை திருட்டு குற்றவாளிகளை நாங்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லை. இ.பி.கோ. சட்டப்பிரிவுகளின் கீழ் தான் சிறையில் அடைக்கிறோம். நாங்கள் நேர்மையாக நடவடிக்கை எடுத்ததால் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் உடனடியாக ஜாமீன் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மீட்கப்பட்ட நரசிம்மி சிலை கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு போலீஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.