கேரளாவில் தென்மேற்கு பருவமழை 30-ந்தேதி தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். அதைதொடர்ந்து இந்த மழை தமிழகத்திலும் பெய்ய தொடங்கும்.தற்போது தமிழகத்தில் வறட்சி இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்திய வானிலை மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கான அறிகுறிகள் அந்தமான் தீவு பகுதிகளில் மழையுடன் தொடங்கி விட்டதாகவும் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கொச்சி வானிலை மையம் வருகிற 30-ந்தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இதன் காரணமாக பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் முன்னோடியாக இன்றே கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும். அப்போது 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கேரளாவின் கடலோர பகுதிகளான விழிஞ்ஞம், கோவளம், சிறையின்கீழ் ஆகிய இடங்களில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.