தபுவின் மறுபக்கம் : அப்பாவும், அக்காவும் வெறுத்ததால் கசந்த வாழ்க்கை
இந்தி நடிகையான தபு, தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்ப பரிச்சய மானவர். இவருக்கு வயது 45. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிகை. அவரது முழுபெயர் தபசும் பாத்திமா ஹாஸ்மி. தபுவிற்கு பர்ஹா கான் என்ற மூத்த சகோதரி இருக்கிறார். தபுவின் சிறுவயதிலேயே அவரது பெற்றோர் பிரிந்து விட்டார்கள்.
11 வயதில் நடிக்க வந்த இவர், பாராட்டத்தகுந்த பல படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி மராட்டி, பெங்காலி சினிமாக்களிலும் நடித்துள்ளார். நடிப்பதற்காகவே ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்தது இவரது குடும்பம்.
தபுவின் தனிப்பட்ட வாழ்க்கையில் கிசுகிசுக்கள் அதிகம். சஜீத் நாடியத்வாலாவை காதலித்தார். ஆனால் திருமணம் செய்துகொள்ள வில்லை. இப்போதும் அவரோடு நெருக்கமாக இருக்கிறார்.
“நான் கூச்ச சுபாவம் கொண்டவள். யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். ஒதுங்கியே இருப்பேன். அதனால் எனக்கு கல்லூரியில் நண்பர்கள் குறைவு. சிறுவயதில் இருந்தே படித்துக்கொண்டே நடித்ததால், என் படிப்பு அவ்வப்போது தடைபட்டது. அதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளானேன்.
எனது முதல் படத்தை மிகுந்த டென்ஷனுடன் நடித்துமுடித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதனால் அந்தப் படத்தை இன்று வரை நான் பார்க்கவில்லை. என் அம்மாவும், பர்ஹாவும்தான் பார்த்தார்கள். என் நடிப்பைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதார்கள். அதன் பின்புதான் என் நடிப்புக்கு எதிர்காலம் இருப்பதாக நம்பி ஐதராபாத்தில் இருந்து கிளம்பி மும்பை வந்து சேர்ந்தோம்.
எப்படியோ கல்லூரி படிப்பை முடித்தேன். அது ஒரு மகிழ்ச்சியான காலகட்டம். என்னுடன் படித்த அசீப் என்னை காதலித்தார். தினமும் எனக்கு பூ, சாக்லேட் என்று ஏதாவது ஒன்றை கொண்டு வந்து தருவது அவர் வழக்கம். பதிலுக்கு நான் எதையும் தரவில்லை. அது ஒருதலை காதல்.
சினிமாவிற்கு வந்த பின்பு என் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. நல்ல கதாபாத்திரங்களுக்கு காத்திருப்பது என் வழக்கம். என் மனம் ஒத்துக்கொண்டால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன்.
நான் குழந்தை பருவத்தில் இருந்தே பயந்த சுபாவமுடையவள். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட பயந்து விடுவேன். அதற்கு காரணம் என் அப்பா. அவர் காரணமில்லாமல் என் மீது வெறுப்பை கொட்டினார். அவருக்கு ஆண் குழந்தைதான் பிடிக்கும். முதலில் அக்காள் பிறந்ததும் அமைதியாக இருந்தார். அடுத்து நானும் பெண் குழந்தை என்பதால் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெறுத்தார். அவருடைய நம்பிக்கையை வீணடித்துவிட்ட என்னை அவரால் மன்னிக்க முடியவில்லை.
அவரால், என்னை நானே வெறுக்கும் நிலை ஏற்பட்டது. இந்த விஷயத்தில் என் அக்காள் கொடுத்து வைத்தவள். அவள் என்னைவிட அழகு, சிவப்பாகவும் இருந்தாள். புத்திசாலியாகவும் இருந்தாள். அதனால் அவளை அப்பா மகளாக ஏற்றுக்கொண்டார். என்னை எல்லோரும் பரிதாபமாக பார்த்தார்கள். எனது சிறு வயதிலேயே அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். அம்மாவும், அக்காவும்தான் என் குடும்பம்.
அக்கா என் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கினாள். நான் எதையும் அவளைக் கேட்டே முடிவு செய்யவேண்டும். எனக்கு பள்ளிக்கு போக பிடிக்கவில்லை.
என் எதிர்ப்பைத் தெரிவிக்க தினமும் ஒரு சிலேட்டை உடைப்பேன். மறுநாள் புது சிலேட்டுடன் பள்ளிக்கு அனுப்பப்படுவேன். இப்படியே தினமும் நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் என் பாட்டி வீட்டிலிருக்கும்போது சிலேட்டை போட்டு உடைத்தேன். அதன் மேலே தடுக்கியும் விழுந்தேன். சிலேட் துண்டு என் கண் அருகில் பட்டுவிட்டது. கொஞ்சம் தவறி கண்ணில் பட்டிருந்தால் இந்நேரம் பார்வையே போயிருக்குமே என்று என் பாட்டி அழ ஆரம்பித்துவிட்டார். ‘அப்பா இல்லாத உங்களை வளர்க்க உன் அம்மா எவ்வளவோ போராடிக்கிட்டிருக்காங்க. நீ தினமும் ஒரு சிலேட்டை உடைக்கிறாயே இது நியாயமா?’ என்று கேட்டார். அப்போதுதான் என் அறிவுக்கு எட்டியது, அம்மாவுக்கு நான் கொடுத்த கஷ்டம். அன்றிலிருந்து சிலேட்டை உடைப்பதை நிறுத்திவிட்டேன்.
ஒரு முறை வகுப்பு ஆசிரியை ஸ்கேலால் என் தலையில் அடித்துவிட்டார். தலை வீங்கிவிட்டது. இரவு முழுவதும் வலித்தது. யாரிடமும் சொல்லவில்லை. காலையில் என் அம்மா தலைவாரிவிட்டபோது வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் கத்திவிட்டேன். காயத்தை பார்த்த என் அம்மா கடுங்கோபத்தோடு பள்ளிக்கு வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். அம்மா என் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாட்டை நான் அன்றுதான் உணர்ந்தேன்.
பர்ஹாவை விட அம்மாவிற்கு என் மீது தான் பிரியம் அதிகம். அது அவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே என்னை அழவைத்து வேடிக்கை பார்ப்பாள்.
ஒரு நாள் என்னை வெளியே அழைத்துச் சென்றாள். அவளது நண்பர்களும் உடன் வந்தனர். எல்லோரும் சேர்ந்து உயரமான மரம் ஒன்றில் என்னை ஏற்றிவிட்டார்கள். நான் இறங்கத் தெரியாமல் பயந்து அலறினேன். ‘உனக்கு தனியாக இருந்து தானே பழக்கம். இது தான் உனக்கேத்த இடம். அங்கேயே இரு’ என்று சொல்லிவிட்டு என் அக்காள் ஓடிவிட்டாள்.
நான் அழுதுகொண்டே பயத்துடன் மரத்தின் மேலே உட்கார்ந் திருந்தேன். அதற்குள் என்னை காணாமல் என் அம்மா பதறியடித்து தேடிக்கொண்டு வந்தார். என் அழுகுரல் கேட்டு ஓடிவந்து என்னை மரத்தில் இருந்து இறக்கிவிட்டார். எனக்கு அன்றிரவே கடுமையான ஜுரம் வந்துவிட்டது. அன்றிலிருந்து உயரமான மரத்தைப் பார்த்தால் லேசான நடுக்கம் வந்துவிடும்.
தேவ் ஆனந்த் மூலமாக எனக்கு ‘ஹம் நெளஜவான்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னைவிட அழகான அவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று அவள் நினைத்திருக்கலாம். தேவ் ஆனந்த் மூலமாக யஷ் சோப்ரா படமான ‘பாஸ்லே’ வில் அவளுக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அவ்வளவுதான் அவளை பிடிக்க முடியவில்லை. என்னை மட்டம் தட்ட நினைத்தாள். படப் பிடிப்பிற்காக சுவிட்சர்லாந்து சென்றார்கள். அவளோடு யாராவது ஒருவர் துணைக்கு வரலாம் என்றார்கள். என்னை உடன் அழைத்துப் போவதாக ஆசை காட்டிவிட்டு கடைசி நேரத்தில் என்னை பழிவாங்கினாள். ஆனாலும் நான் யாரையும் பழிவாங்க விரும்புவதில்லை. என் மீது யாரும் ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்புவ தில்லை. அதனால்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்கிறார், தபு.