தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இங்கிலாந்து வென்றது
ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்சின் சதம் முதலில் ஆடிய இங்கிலாந்தை ஆறு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை குவிக்க வைத்தது. இரண்டாவதாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா கடைசி ஓவரில் ஏழு ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வுட் பந்து வீச்சில் 4 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஸ்டோக்ஸ்சுடன் மார்கனும், ஜோ பட்லரும் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை குவித்தனர்.
இந்த ஆட்டத்தில் கவலைக்குரிய விஷயமாக ஸ்டோக்ஸ் காயமடைந்து மூன்று ஓவர்களையே வீச முடிந்தது. சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் துவங்கவுள்ள நிலையில் இந்தக்காயம் முக்கியமானதாகவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் டி காக் 98 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டார். டி வில்லியர்ஸ்சும், டேவிட் மில்லரும் முறையே 52 மற்றும் 71 ரன்களை குவித்தனர். ”கடைசி மூன்று பந்துகள் வரையில் வெற்றி எங்கள் பக்கம் இருந்ததாகவே நினைத்திருந்தோம்” என்றார் டி வில்லியர்ஸ்.