வயிற்று புண்களை ஆற்றும் அருகம்புல்
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று புண்களை ஆற்றக்கூடியதும், உடலுக்கு பலம், குளிர்ச்சிய தரவல்லதும், தோல் வியாதிகளை போக்க கூடியதுமான அருகம்புல்லின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
அருகம்புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காலை வேளையில் அருகம்புல் மீது வெறும் காலில் நடப்பதால் மன உளைச்சல் மறைந்து போகும். பாதங்களில் நரம்பு முடிச்சுகளை தூண்டி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அருகம்புல்லில் புரதச்சத்து, இரும்பு சத்து அதிகளவில் உள்ளன. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இதில் அருமையான மருத்துவ குணங்கள் உள்ளன.
அருகம்புல்லை பயன்படுத்தி வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், வெண் மிளகுப்பொடி, வெண்ணெய். செய்முறை: 50 மில்லி அருகம்புல் சாறுடன் சிறிது வெண் மிளகுப்பொடி சேர்த்து நீரிவிட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறுநெல்லிக்காய் அளவுக்கு வெண்ணெய் சேர்க்கவும். இது உருகியதும் வடிகட்டி குடித்துவர வயிற்று புண்கள் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். உடலுக்கு பலம், குளிர்ச்சியை தருகிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. வெள்ளைபோக்கை சரிசெய்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவதை தடுக்கிறது.
அருகம்புல்லை பயன்படுத்தி தோல்நோய்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது கடுக்காய் பொடி, சம அளவு மஞ்சள் பொடி எடுக்கவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை படர்தாமரை, வியர்குருக்கு மேல்பூச்சாக போடும்போது இப்பிரச்னைகள் சரியாகும். அருகம்புல் சாறு பூஞ்சை காளான்களை போக்கும். வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் எரிச்சல், கருமை நிறத்தை சரிசெய்யும். தோலின் நிறம் வெகுவிரைவில் பழைய நிலைக்கு திரும்பும்.
அருகம்புல்லை பயன்படுத்தி வறண்ட சருமத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல் சாறு, பசு வெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் பசு வெண்ணெய் எடுக்கவும். இதனுடன் சமஅளவு அருகம்புல் சாறு சேர்த்து காய்ச்சினால் நெய் பதத்தில் வரும். இதை, இரவு தூங்கப்போகும் முன்பு வறண்ட சருமம் இருக்கும் இடத்தில் பூசி காலையில் குளித்துவர வறண்ட சருமம் பிரச்னை விரைவில் மாறும். காயம் ஏற்பட்டால் அருகம்புல்லை அரைத்து போடும்போது ரத்தம் நின்று காயம் ஆறும்.புளிஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாத நிலை, குடலில் தேங்கியிருக்கும் அமிலம் வெளியேறுவதால் இப்பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு வாழை பிஞ்சு மருந்தாகி பலன் தருகிறது. வாழை பிஞ்சுகளை நறுக்கி காயவைத்து பொடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். புளிஏப்பம் ஏற்படும்போது இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து கால் பங்கு உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்புசம், புளி ஏப்பம், வயிறு எரிச்சல், பசியின்மை போன்றவை சரியாகும்.