சரிவை நோக்கி செல்லும் நிலத்தடி நீர்மட்டம்: வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் அனைத்து தேவைகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடிநீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நீர்வளத்துறை சேகரித்துள்ள விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டைவிட குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியது. அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. வீடுகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்து மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைக்க கட்டாயப்படுத்தினர்.
புதிதாக வீடு கட்டுவோர் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கான திட்டத்தையும் வரைப்படத்தில் இணைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. இந்த திட்டம் அப்போது வரவேற்பை பெற்றதுடன், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது.
நாளடைவில் இந்த திட்டத்தை முழுவீச்சாக செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. இப்போது புதிய வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்படுவதே இல்லை. ஏற்கெனவே அமைத்திருந்த வீடுகளிலும் அதை எடுத்துவிட்டனர்.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தமிழக அரசு தடுப்பணைகள் கட்டுவது, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் திட்டத்தை நகரமைப்பு துறை மேற்கொள்கிறது. ஆனால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த திட்டத்தை மீண்டும் செயல் படுத்தினால், நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்” என்றனர்.
இதுகுறித்து நகரமைப்புத் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசு கட்டிடங்களிலும், பெரிய கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகிறோம். பல இடங்களில் புதிதாக கட்டும் அரசுக் கட்டிடங்களில் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது” என்றனர்.