பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான முதல் சுற்று போட்டியில் நேற்று உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர், ரஷ்ய வீராங்கனையான கேத்ரினா மகரோவாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் எளிதாக வெற்றி பெறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவருக்கு மகரோவா கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற மகரோவா, அதே வேகத்தில் அடுத்த செட்டையும் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கெர்பருக்கு அதிர்ச்சி அளித்தார். இப்போட்டி 1 மணிநேரம் 22 நிமிடங்கள் நீடித்தது.
விட்டோவா வெற்றி
மற்றொரு முதல் சுற்று போட்டியில் செக் குடியரசு வீராங்கனையான பெட்ரோ விட்டோவா, அமெரிக்காவின் ஜூலியா போஸரப்பை எதிர்த்து ஆடினார். கடந்த டிசம்பர் மாதம் கொள்ளைக்காரன் ஒருவனிடம் இருந்து கத்திக்குத்து வாங்கிய பெட்ரோ விட்டோவா, காயம் குணமடைந்த நிலையில் இப்போட்டியில் ஆடினார்.
நீண்டகாலம் டென்னிஸ் போட்டிகளில் ஆடாததால் முன்புபோல அவர் வேகமாக ஆடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் மைதானத்தில் அசுரத்தனமாக ஆடிய விட்டோவா, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் போஸரப்பை வென்றார். இப்போட்டியில் வெல்ல அவர் 1 மணிநேரம் 13 நிமிடங்களையே எடுத்துக்கொண்டார். இப்போட்டி யில் விட்டோவா 9 ஏஸ்களை பறக்கவிட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.
மற்றொரு முதல் சுற்று போட்டியில் புயிர்டோரிகாவின் மோனிகா புயிக், 6-3, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள ரோபர்டா வின்சியை போராடி வெற்றிகொண்டார். இப்போட்டி 1 மணிநேரம் 50 நிமிடங்கள் நீடித்தது.