போன் மூலம் ‘தலாக்’ கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தன் மனைவியை, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன், போன் மூலம், ‘தலாக்’ கூறி, அவரது கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23, ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன், அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம், மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் :
இந்நிலையில், ‘ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது. ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என, சாயிரா பானுவிடம், ஒமர் கூறியுள்ளான்.ஐதராபாத்தை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், சாயிரா பானுவுக்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்று உள்ளான்.
அதன்படி, இம்மாதம், 2ம் தேதி ரியாத் சென்றடைந்தார் சாயிரா பானு. அங்கு, ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்து, வீட்டு வேலை செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான்.ஆனால், அந்த ஷேக், சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான். அதனால், ரியாத்திலேயே உள்ள ஒமரை, சாயிரா பானு தொலைபேசியில் தொடர்பு கொண்டுஉள்ளார்.
விவாகரத்து :
அப்போது, ‘நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன். இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்’ என, தொலைபேசியில், ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்துள்ளான் ஒமர்.
இந்த தகவல் கிடைத்ததவும், சாயிரா பானுவின் தாய் பானு பேகம், புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.இதற்கிடையில், சவுதியில் உள்ள தன் மகளை மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பிஉள்ளார்.