கால்நடை விற்பனையில் எருமைகளுக்கு விலக்கு?
இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட கால்நடைகள் பட்டியலில் இருந்து, எருமைகளுக்கு விலக்களிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்ப்பு:
மாடு, ஒட்டகம் போன்றவற்றை சந்தைகளில் இறைச்சிக்காக விற்க தடை விதித்து, மிருகவதை தடுப்புச் சட்டத்தில், மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் செய்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த விதிமுறைகளில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, மிருகவதை தடுப்பு சட்டத்தில் இருந்து, எருமைகளுக்கு விலக்களிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மாடு, ஒட்டகம் போன்றவற்றை, சந்தைகளில் இறைச்சிக்காக விற்க தடை விதிக்கப்பட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாட்டுக்கறி ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, மிருகவதை தடுப்புச் சட்ட விதிமுறைகளில், எருமைகளுக்கு விலக்களிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு:
எருமைகள் பெருமளவு இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருவதால், அவற்றுக்கு கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.