தென்மேற்கு பருவமழை இன்று துவங்க வாய்ப்பு
வங்கக் கடலில் சுழலும், ‘மோரா’ புயல், இன்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் நிலையில், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதி களில், இன்று தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. கத்திரி வெயில் நேற்று முன்தினம் முடிந்ததால், மார்ச் முதல் வறுத்தெடுத்த கோடை வெயில் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில், வங்கக் கடலில் நேற்று முன்தினம்
உருவான, அதி தீவிர புயலான, ‘மோரா’ இன்று நண்பகலில், வங்கதேசத்தில், சிட்டகாங் அருகே
கரையை கடக்கிறது. இதை தொடர்ந்து, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை, அரபிக்கடலில் இருந்து வரும் தென்மேற்கு திசை காற்று வலுவடைந்து, தென்மேற்கு பருவமழை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய, தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில், தென்மேற்கு பருவமழை துவங்கும் என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனும் உறுதி செய்துள்ளார். இந்த மழை, ஜூன் இரண்டாம் வாரத்தில் மேலும் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை, மதுரை, திருத்தணியில், நேற்று வெயில் தகித்தது. திருத்தணியில், 42.6; சென்னை விமான நிலையம், 41.8; நுங்கம்பாக்கம், 41.6 மற்றும் மதுரையில், 40.6 டிகிரி செல்ஷியஸ் என, வெப்பம் பதிவானது. சென்னையில் நேற்று பகலில் வெயில் வறுத்தெடுத்த நிலையில், மாலையில், பல இடங்களில் லேசான வெப்ப சலன மழை பெய்தது. சராசரியாக, 4 மி.மீ., மழை பெய்ததாக, தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வால்பாறை, கன்னியாகுமரியிலும் லேசான மழை பெய்துள்ளது. ‘இன்னும் இரு தினங்களுக்கு, மாநிலம் முழுவதும், சில இடங்களில் இடியுடன் மழை பெய்யலாம். சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் இருக்கும்’ என, வானிலை மையம் கணித்துள்ளது.