தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
தெற்கு அரபிக்கடல் பகுதியில் ஈரப்பதம் மிகுந்த தென்மேற்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால், கேரள கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
அதேபோல் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தான் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இரு நாட்களுக்கு முன்னதாகவே மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.ஜே.ரமேஷ் கூறும்போது. ‘‘கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் அடுத்த சில பருவமழை தொடங்கவுள்ளது’’ என்றார்.
தெற்கு அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு, கேரளா மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் வங்கக் கடலின் மேற்கு மத்திய, தென் மேற்கு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்னதாகவே கடந்த 14-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதேபோல் இலங்கையிலும் கடந்த 20-ம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.