வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 1 ரன்னில் ரூபல் ஹொசைன் பந்திலும், அடுத்து களமிறங்கிய ரஹானே 11 ரன்களில் முஸ்டாபிஸூர் ரஹ்மான் பந்திலும் போல்டானார்கள்.
21 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ஷிகர் தவணுடன் இணைந்த தினேஷ் கார்த்திக் அற்புதமாக பேட் செய்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். ஷிகர் தவண் 67 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 31 ரன்களில் இஸ்லாம் பந்தில் போல்டானார். சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 77 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் குவித்த நிலையில் ரிட்யர்டு முறையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 32, அஸ்வின் 5 ரன்களில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 54 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாச இந்திய அணி பெரிய அளவிலான இலக்கை கொடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ரூபல் ஹொசைன் 3, இஸ்லாம் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 325 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரது பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. அந்த அணி 22 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை தாரை வார்த்தது.
இம்ருல் கெய்ஸ் 7, சவுமியா சர்க்கார் 2, சபிர் ரஹ்மான் 0, ஷாகிப் அல்-ஹசன் 7, மஹ்மதுல்லா 0, மொசடக் ஹொசைன் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஸ்பிகுர் ரஹிம் 13 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய மெகதி ஹசன் மிராஸ் 24, இஸ்லாம் 18, ரூபல் ஹொசைன் 0 ரன்களில் நடையை கட்ட வங்கதேச அணி 23.5 ஓவர்களில் 84 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும் பும்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.